JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆனமடுவில் 207 குடும்பங்களுக்கு நில உரிமங்கள் வழங்கி வைப்பு.

எம்.யூ.எம்.சனூன்

ஆனமடு மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தித்து வரும் நில உரிமைப் பத்திரப் பிரச்சினைக்கு சட்டரீதியான தீர்வுகள் வழங்குவதற்கும், 207 குடும்பங்களுக்கு உத்தியோகபூர்வ நில உரிமங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதற்கும், ஆனமடுவவில் அமைந்துள்ள சுதம்பாய நகர மண்டபத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தேசிய கொள்கைத் திட்டத்திற்கு இணங்க, தோணிகல, பரமாகந்த, கொய்லாடிகம, 7வது கிராமம், ஆலங்குளம் மற்றும் தல்கஸ்வெவ ஆகிய பிரிவுகளில் நீண்ட காலமாக ஒரு அங்குல நிலம் கூட சொந்தமாக இல்லாத மக்களுக்கு இந்த உத்தியோகபூர்வ நில உரிமங்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், பேரிடர் இழப்பீடு மற்றும் 'பிலிசரன' வீட்டு வசதி உதவி காசோலைகளை வழங்குவதற்கும், சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் சமூக சேவை உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

'பிரஜாசக்தி' திட்டத்தின் மூலம், வேலை செய்யக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் சமூகத்திற்கு வலுவூட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், நாட்டில் மீண்டும் மானியங்களைச் சார்ந்திருக்கும் ஒரு பொருளாதாரச் சூழலை உருவாக்காமல், மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் முன்னேற அனுமதிக்கும் ஒரு திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார். 

இந்த நில உரிமங்கள் வழங்குவதும் அந்த முழு செயல்முறையின் ஒரு அங்கம் என்றும், தங்களுக்கு சொந்தமாக ஒரு அங்குல நிலம் கூட இல்லாமல் குடியேறி விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், எந்த நேரத்திலும் இருந்த அச்சமும் தயக்கமும் இன்றிலிருந்து முடிவுக்கு வரும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த நிலங்களின் உரிமையை அரசாங்கமோ அல்லது வேறு எவருமோ கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சம் இனி இல்லாததால், "இந்த நிலம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுமா, அல்லது கையகப்படுத்தப்பட மாட்டாதா" என்று பல தசாப்தங்களாக இருந்து வந்த அச்சமும் தயக்கமும் இன்று முடிவுக்கு வரும். மேலும், பெறப்பட்ட இந்த சட்டப்பூர்வ நில உரிமையைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், அதை விற்கக்கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தங்கள் தாய் நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட இல்லாதபோதிலும், கடந்த போரின்போது நாட்டிற்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து, ஊனமுற்றவர்களாகி, பல்வேறு இன்னல்களைச் சந்தித்த பிள்ளைகள் இந்தக் குடும்பங்களில் உள்ளனர் என்பதை நான் அறிவேன். எனவே, எதிர்காலப் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த நில உரிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதையும்  அமைச்சர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

மேலும், நில உரிமங்கள் இல்லாத அனைவருக்கும் சட்டப்பூர்வமான நில உரிமங்களை வழங்கி, காணி கச்சேரிகளைப் பல கட்டங்களாக நடத்த எங்கள் அரசாங்கம் தயாராக உள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் ஆனமடு பிரதேச சபையின் தலைவர் ஆலோக்க பண்டார, பிரதித் தலைவர் தில்ஷான் இமல்க, பிரதேச சபை உறுப்பினர் முதியன்ச அபேரத்ன, சபை உறுப்பினர்கள், ஆனமடு பிரதேச செயலாளர் லக்மல் விஜேசிங்க, அரச அதிகாரிகள் மற்றும்ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பயனாளிகள் கலந்து கொண்டனர்.















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال