JobVibe.lk - Sri Lanka Job Portal

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறும் "எரைஸ் சிட்டீஸ் போரூம் 2026" சர்வதேச மாநாட்டில், புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உரை.

எம்.யூ.எம்.சனூன்

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறும்  "எரைஸ் சிட்டீஸ் போரூம்  2026" சர்வதேச மாநாட்டில், புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ள அபாயங்களை எதிர்கொள்வதற்கான நகரின் கொள்கைகள், நடைமுறை நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

கழிவு முகாமைத்துவம், வடிகால் கட்டமைப்பு மேம்பாடு, இயற்கை நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் நிலையான நகர அபிவிருத்தி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சர்வதேச அரங்கில் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் புத்தளம் நகரமானது ஒரு கடலோர நகரம். வெள்ள அபாய மேலாண்மை என்று வரும்போது, நாம் பல விஷயங்களை கவனிக்க வேண்டும். கனமழை, வடிகால் அமைப்பு, குளம் நிலை, நகர வளர்ச்சி என அனைத்தும் தொடர்புடையது.

இதை நாங்கள் 3 முக்கிய பகுதிகளாக பிரித்துள்ளோம். கொள்கை, தழுவல், நீண்ட கால திட்டம் ஆகியனவாகும்.

எங்கள் கொள்கையில் வெள்ள அபாய மேலாண்மை தான் முதல் இடத்தில் உள்ளது. ஒரு கட்டிடத்திற்கு அனுமதி கொடுக்கும் போதும், நில பயன்பாட்டிற்கு அனுமதி கொடுக்கும் போதும், வெள்ள அபாய தகவல் இல்லாமல் நாங்கள் அனுமதி கொடுப்பதில்லை. 

பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூட, நீண்ட கால காலநிலை மாற்றத்தை பார்த்து தான் அனுமதி கொடுக்கிறோம். 

மேலும் சதுப்பு நிலங்கள் இயற்கை நீர்வழிகள், இயற்கை நீர் நிலைகளை பாதுகாக்கவும், இழந்த நீர் நிலைகளை மீட்டெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

தழுவல் எனும் பகுதியிலே மூன்று விஷயங்கள் உள்ளடங்குகின்றன.பொறியியல் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு, மற்றும் தயாராக உள்ள சமூகம்.

இதில் முதலில் கவனிக்க வேண்டியது குப்பை மேலாண்மை. குப்பை, நீரில் கலந்தால் எவ்வளவு பெரிய தொழில் நுட்பத்துடன் கட்டமைப்பு கட்டினாலும் பயனில்லை. அதனால் நாங்கள் கடுமையான குப்பை பிரித்தல் மற்றும் Waste to Wealth திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். 

சமூகத்தினரை ஈடுபடுத்தி, குப்பைக்கு பணம் கொடுக்கிறோம். Zero Waste City ஆக மாற்ற முயற்சிக்கிறோம். பொலித்தீன், பிளாஸ்டிக் போன்றவற்றை வாங்க ஆட்கள் உள்ளனர். எந்த குப்பையும் சுற்றுச்சூழலுக்கு போகாது.

அடுத்து, கால்வாய்கள், பாலங்கள் மற்றும் குளம் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட அமைப்பாக கட்ட வேண்டும். இதற்கு ஒரு சரியான பொறியியல் திட்டம் தேவை.

அடுத்து நீண்ட கால திட்டம். இப்போது நாங்கள் ஒரு பெரிய மாஸ்டர் ப்ளேன் உருவாக்கும் பணியில் உள்ளோம். ஏற்கனவே உள்ள நீர் நிலைகள், மேல் பகுதி, கீழ் பகுதி நீரோட்டம், இயற்கை வளங்கள், வடிகால் அடைப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்கிறோம். 

முதலில் உடனடியாக அடைப்புகளை அகற்றுவோம், நடுத்தர காலத்தில் சிறு சீரமைப்பு வேலைகள் செய்து வெள்ள அபாயத்தை குறைப்போம். நீண்ட காலத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் நிதியுடன் பெரிய திட்டங்களை கட்டுவோம்.

இது மிகவும் இளம் மாநகர சபை. ஒன்றரை வருடம் தான் ஆகிறது. நான் தான் இதன் முதல் மேயர். இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும். இந்த மாநாடு மூலம் தொழில்நுட்ப உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال