(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சேமித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் புதன்கிழமை (28) தீர்ப்பளித்துள்ளது.
தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் பிரதிவாதி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இதன்போது, பிரதிவாதி இதுவரை விளக்கமறியல் மற்றும் தடுப்புக் காவலில் கழித்த ஏழரை ஆண்டுகளைச் சிறைத்தண்டனைக் காலத்திலிருந்து கழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய, அவர் மேலும் சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இவ்வழக்கின் ஆறாவது பிரதிவாதியான மொஹமட் ரமீஸ் மொஹமட் சஜித், தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு மேலதிக அவகாசம் கோரியுள்ளார்.
இதனையடுத்து, அவரது நிலைப்பாட்டை அறிவதற்காக வழக்கை வியாழக்கிழமை (29) காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், குறித்த பிரதிவாதியை நாளை காலை 7.45 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
