(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கிலங்கையின் இயற்கை எழில்மிகுந்த 'மருதமுனை' எனும் கிராமம் தனக்கென ஓர் இலக்கியப் பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கிறது. அந்த மண்ணில் பிறந்தவர் தான் இன்று எழுத்துலகில் “சுமைய்யா ஜெஸ்மி மூஸா” என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் எழுத்தாளர் பாத்திமா சுமைய்யா.
அவரது தந்தை முகம்மது மர்சூக் (புனைப் பெயர் ஆமினா மர்சூக்) தொண்ணூறுகளில் தினசரிப் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் கவிதை, கட்டுரை, நாடகம் என பன்முக இலக்கியச் செயற்பாடுகள் மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர். அந்தப் பாரம்பரியத்தின் பிள்ளையாகப் பிறந்த சுமைய்யா, இயற்கையாகவே தமிழ் மீதும் இலக்கியத்தின்மீதும் தீராத பேரார்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
பாடசாலைக் காலம் முதலே கட்டுரை, கவிதை, சிறுகதை, இலக்கியம் நயத்தல், அறிவிப்புத்துறை போன்ற பல்வேறு துறைகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்திய அவர், உயர் தரத்தில் 3A சித்திகளுடன் வழக்கறிஞர் துறைக்குத் தெரிவாகி இருந்த போதிலும், தமிழ்மீது கொண்ட காதலால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழைத் தெரிவு செய்து 2010 இல் கலைப் பட்டதாரியாக பட்டமளிக்கப்பட்டார்.
2013 முதல் மருதமுனை கலாசார நிலையத்துடன் இணைந்து கவிதை, கட்டுரை, நாடகம், பாடல் ஆகியவற்றில் இளம் தலைமுறையை வழிநடத்தி வந்தார். திருமண வாழ்த்துக் கவிதைகள், இரங்கற் கவிதைகள் என சமூகத்தின் பல பரிமாணங்களிலும் அவரது பங்களிப்பு தொடர்ந்தது.
2015 இல் “House of English” முன்பள்ளியைத் தொடங்கி, கல்வி மட்டுமல்லாது, குழந்தைகளுக்கு இசை, நாடகம், ஆடல், பேச்சு ஆகிய துறைகளிலும் பயிற்சியளித்து, ஆண்டுதோறும் பிரமாண்டமான கலை நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார்.
2016 இல் அம்பாறை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்த அவர், சிங்கள மொழியிலும் தனது திறமையை வெளிப்படுத்தி, சகோதர இனத்தவரிடையே மதிப்பைப் பெற்றார்.
2021 இல் கல்முனைப் பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்று, பிரதேச செயலகக் கலாசாரப் பிரிவோடு இணைந்து கவியரங்கு, விவாத மேடை, அறிவிப்பாளர் பயிற்சி, பாடல் மற்றும் நாடகப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்.
இலக்கியப் பயணத்தின் அடைவுகள்
அரச மற்றும் பிற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று, பிரதேசம், மாவட்டம், மாகாணம், தேசியம், சர்வதேசம் என பல்வேறு நிலைகளில் சுமைய்யா பல விருதுகளை வென்றுள்ளார்.
2021 – கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் படைப்பாக்கப் போட்டி – சிறுகதை (II இடம்)
2023 – மூன்று அரச இலக்கிய விருதுகள் (சிறுகதை, கட்டுரை, பாடலாக்கம்-முதலிடம்)
2023 – தினகரன் பத்திரிகை சிறப்பு வாழ்த்து: “நான்கு அரச விருதுகளை ஒரே வருடத்தில் வென்றெடுத்த எழுத்தாளர்”
2024 – கானல் அமீரகம் (ஐ.அ. இராச்சியம்) சர்வதேச சிறுகதைப் போட்டியில் தேர்வு
2024 – பேசும் புதிய சக்தி (இந்தியா) சர்வதேச சிறுகதைப் போட்டியில் சிறப்புச் சிறுகதை
2024 – CREATE இலக்கிய வட்டம் (புத்தளம்) தேசிய சிறுகதைப் போட்டியில் வெற்றி
2024 – பிரதேச மற்றும் மாவட்ட இலக்கியப் போட்டிகளில் பல முதலிடங்கள் (பாடல் ஆக்கம், ஆய்வுக் கட்டுரை, சிறுகதை)
2024 – “கலைஞர் சுவதம் – 2024” (கல்முனை பிரதேச செயலகம்)
2024 – “சிறந்த பெண் ஆளுமை – 2024” (சிலோன் மீடியா போரம்)
2025 – தினகரன் வாரமஞ்சரி நடாத்திய சர்வதேச மருதூர்கொத்தன் இஸ்மாயீல் நினைவுச் சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு
2025 – உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு (திருச்சி, இந்தியா) – பேராளராகப் பங்கேற்பு
2025 – தேசிய இலக்கியப் போட்டிகள் (சிறுகதை, திரைப்பட விமர்சனம்) பிரதேச மட்டத்தில் முதலிடம்
2026 - இந்திய எழுத்தாளர் சங்கமம்
(Writers Cafe ) நடாத்திய சர்வதேச சிறுகதை போட்டியில் இரண்டாம் இடம்
2026 - தனூஷ்கோடி ராமசாமி நினைவு சர்வதேச சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடம்
2026-தினச்சுடர் பத்திரிகை வழங்கிய "பன்முக ஆளுமை" விருது
2026-கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்
அரச இலக்கிய போட்டிகளில்
சிறுகதை - முதலிடம்
திரைவிமர்சனம்-இரண்டாம் இடம்
மரபுக்கவிதை- மூன்றாம் இடம்
2026-கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் "இளங்கலைஞர்" விருது
தமிழைப் பிடித்ததால் இவர் படித்ததும் தமிழ்; கரம் பிடித்ததும் தமிழ். இவரது கணவர் ஜெஸ்மி மூஸா பிரபல தமிழ் பாட ஆசிரியர், வலயத்திற்கான தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர். பன்னூலாசிரியர், தமிழ் முதுகலைத் தத்துவமாணி, தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலாநிதி ஆய்வு மாணவன் என தமிழில் ஊறித் திளைத்தவர்.
“சுமைய்யா ஜெஸ்மி மூஸா” என்ற பெயரில் எழுதி வரும் இவர், தனது பரிசு பெற்ற சிறுகதைகளை ஒரு சிறுகதைத் தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.தேசிய பத்திரிகைகளிலும், கிழக்கு மாகாண சாஹித்ய விருது சஞ்சிகைகளிலும் (அவரி, கீறல் போன்றவை), இந்திய சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
“Fathima Sumaiya” என்ற இவரது முகநூல் ஐடி, அவரது கல்வி மற்றும் இலக்கியப் பயணத்தின் சான்றாக நிற்கிறது.
முகம்மது மர்சூக் பாத்திமா சுமைய்யா அவர்களின் இலக்கியப் பயணம் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி தமிழுலகில் புதிய அத்தியாயங்களை எழுதி, சரித்திரம் படைத்திட எமது ஊடக நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

