(கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்)
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் கற்பிட்டி பிரதேச செயலகம் இணைந்து நடத்தும் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய இலக்கிய விழாவின் திறந்த போட்டியாளர் பிரிவில், புதுக்கவிதை ஆக்கப் போட்டியில் பங்குபற்றிய கற்பிட்டி, மண்டலகுடா கிராம அலுவலர் ஏ. எச். எப். பர்வின், பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் முதலாம் இடங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
தேசிய இலக்கிய விழாவின் புதுக்கவிதை ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாடல் ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
கற்பிட்டி மண்டலகுடா கிராம அலுவலராகப் பணியாற்றும் ஏ. எச். எப். பர்வின், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கலை கலாசார சம்மேளனத்தின் உப செயலாளராகவும், புத்தளம் மாவட்ட செயலகத்தின் கலை கலாசார சம்மேளனத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும், புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் மாவட்ட இணைப்பாளராகவும், கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.
இவரது கவிதைகள் அடங்கிய “பற்றி எரியும் இதயக்காடு” எனும் கவிதை நூல் விரைவில் வெளிவரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



