(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினரால், பத்தலங்குண்டு கல்லாறு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் புதன்கிழமை (2026 செப்டம்பர் 30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1,270 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளின் தொகையொன்று சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தினால், பத்தலங்குண்டு கல்லாறு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த கடற்பரப்பில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான 26 மூட்டைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,270 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் அடங்கிய தொகையொன்று இவ்வாறு சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளின் தொகை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



