JobVibe.lk - Sri Lanka Job Portal

LTTE யினரின் சுற்றிவளைப்பும், கைப்பற்றப்பட்ட ஜிஹாத் அமைப்பின் ஆயுதங்களும்.

20 வது தொடர்................

வடகிழக்கில் இந்தியப் படையினருடனான கடுமையான போருக்கு மத்தியில் பிரேமதாசா - LTTE பேச்சுவார்த்தை 1989 ஏப்ரல் மாதம் ஆரம்பமானதுடன், இலங்கை அரசுடன் ஜூன் 1989 இல் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. 

25.10.1989 இல் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒரே நாளில் இந்தியப் படையினர் வெளியேறினாலும், உடனடியாக அம்மாவட்டத்தை LTTE யினரால் கைப்பற்ற முடியவில்லை. 05.11.1989 அன்று TNA மீதான தாக்குதலுக்கு பின்புதான் அம்பாறை மாவட்டம் முழுவதையும் LTTE யினரினால் கட்டுப்படுத்தப்பட்டது. இது பிரேமதாசாவுடனான உடன்பாட்டுக்கு அமைவானது. 

வடகிழக்கில் தமிழ் பிரதேசங்களில் மட்டுமல்லாது முஸ்லிம் பிரதேசங்களிலும் LTTE யினரின் காரியாலயங்கள் திறக்கப்பட்டது. காரியாலயங்கள் என்று கூறப்பட்டாலும் அவைகள் பொலிஸ் நிலையங்களாகவே செயற்பட்டன. 

அம்பாறை மாவட்டத்தில் LTTE யினரின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமகாலத்தில், அருகில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தியப் படையுடன் போர் நடைபெற்றது. 

அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறியது போன்று ஒரே நாளில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இந்திய படையினர் வெளியேறவில்லை. 1989 நவம்பர், டிசம்பர் ஆகிய காலங்களில் கட்டம் கட்டமாக வெளியேறினர். 

14.12.1989 இல் மட்டக்களப்பையும், 1990 ஜனவரி முதல் மார்ச் வரை யாழ்ப்பாணத்தில் இருந்தும் இந்தியப் படையினர் படிப்படியாக வெளியேறியபோது, LTTE யினர் அப்பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றினர்.  

LTTE யினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தமது உள்ளூர் நிர்வாக அமைப்புகளை உருவாக்கினர். காவல், ஒழுங்கு நடவடிக்கைகளில் தலையிட்டது, வரி வசூல் செய்தமை, உள்ளூர் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தை எடுத்துக் கொண்டமை, தமது அலுவலகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு நிலையங்களை அமைத்தமையாகும்.  

இலங்கை இராணுவமும், பொலிசாரும் முடக்கப்பட்டனர். அன்றாட உணவுகளை கொள்வனவு செய்வதற்காக முகாம்களைவிட்டு வெளியேறுவதனைத் தவிர, வேறு எந்த வெளி வேலைகளும் இராணுவம் மற்றும் பொலிசாருக்கு இருக்கவில்லை. 

தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் இலங்கை பொலிஸ் நிலையங்களில் தங்களது முறைப்பாட்டுகளை வழங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. LTTE யினரின் காரியாலங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்தனர். அதாவது பொலிஸ், நீதிமன்றங்கள் மூலமாக பெறவேண்டிய சேவைகளை LTTE யினர் மூலமாகவே பெற்றுக் கொண்டனர். முறைப்பாட்டாளருக்கு விரைவாக தீர்வு வழங்கப்பட்டதே இதற்கு காரணமாகும். 

முதலில் அம்பாறை மாவட்டம் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததும் முதலாவது காரியம் ஒன்றில் ஈடுபட்டனர். அதாவது முஸ்லிம் ஊர்களில் உள்ள சில வீடுகள் மற்றும் முக்கிய இடங்கள் LTTE யினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் ஆரம்பமானது. அதுபோல் ஏனைய மாவட்டங்களிலும் நடைபெற்றது.  

அதாவது முஸ்லிம் காங்கிரசின் பிரமுகர்களின் இல்லங்கள் மற்றும் EPRLF போன்ற தமிழ் இயக்கங்களின் அச்சுறுத்தல் ஏற்பட்ட காலங்களில் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் ஜிஹாத் என்ற போர்வையில் களத்தில் நின்ற இளைஞர்களின் வீடுகள் அனைத்தும் LTTE யினரால் முற்றுகையிடப்பட்டது. 

இந்த முற்றுகையின்போது TNA யினரினால் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. சில முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டனர். இன்னும் பலர் ஊரைவிட்டு தப்பி ஓடினர். சிலர் வேறுவழியின்றி ஊருக்குள்ளேயே தலைமறைவாக வாழ்ந்தனர். முஸ்லிம்களிடம் ஆயுதங்களும் இருக்கக்கூடாது அத்துடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களும் இருக்கக்கூடாது என்ற LTTE யினரின் கொள்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த முற்றுகையின்போது பெரும்பாலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டாலும், அது முழுமையாக கைப்பற்றப்பட்டது என்று கூறமுடியாது. 

இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. அதாவது காட்டுக்குள் தலைமறைவாக இருந்து வெளியே வந்த LTTE யினருக்கு எவ்வாறு ஆயுதம் வைத்திருந்த முஸ்லிம் இளைஞர்களின் வீடுகள் தெரியவந்தது ? எவ்வாறு துல்லியமாக குறித்த இடங்களை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள் என்பதுதான் அந்தக் கேள்வியாகும். 

அவ்வாறு துல்லியமான தகவல்களை வழங்கியது வேறு யாருமல்ல, அவர்களும் முஸ்லிம்கள்தான். அதாவது புலிகளுடன் இணைந்துகொண்ட முஸ்லிம் இளைஞர்கள்தான் அவ்வாறான தகவல்களை LTTE யினருக்கு வழங்கினார்கள். 

தொடரும்..................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال