22வது தொடர்........
இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருக்கும்போதே 1989 ஏப்ரல், மே மாதங்களில் பிரேமதாசா அரசுக்கும், LTTE க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அதில் LTTE யினர் பின்வரும் கோரிக்கைகளை பிரேமதாசா அரசிடம் முன்வைத்தனர்.
1. இந்தியப் படையினர் உடனடியாக வெளியேற வேண்டும்
2. வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வேண்டும்
3. CVF படைப்பிரிவு கலைக்கப்பட வேண்டும்
4. ஒரு இடைக்கால நிர்வாகம் அமைக்க வேண்டும்
5. இந்தியப் படையினர் வெளியேறியதும் சட்டம், ஒழுங்கை LTTE கவனிக்க வேண்டும்
6. இலங்கை இராணுவத்தினர் வடகிழக்கில் இருக்கலாம், ஆனால் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளில் இரண்டு தரப்புக்கும் ஓர் பொதுவான நோக்கம் இருந்தது. அது இலங்கையிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்ற வேண்டும் என்பதாகும். இதனால் இரு தரப்புக்கும் இடையில் ஓர் தற்காலிக புரிந்துணர்வு உருவானது. இந்தப் பொதுவான நோக்கம் 1990 மார்ச்சில் நிறைவேறியபின்பு உறவுகளில் விரிசல் ஆரம்பமானது.
LTTE யினர் வெறுமனே இந்தியப் படையினரை வெளியேற்ற விரும்பவில்லை, மாறாக இந்தியப் படையினர் வெளியேறிய பின்பு உருவாகும் அதிகார வெற்றிடத்தை தானே நிரப்ப வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
1989 இல் பிரேமதாசா அரசு, LTTE யினருக்கு ஆயுதம் மற்றும் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தியப் படையினருக்கு எதிராக LTTE யை வலுப்படுத்துவது பிரேமதாசாவின் நோக்கமாக இருந்தது.
இந்த விவகாரம் பின்னர் மிகவும் சர்ச்சைக்குரியதாகியது. 1990 ஜூனில் போர் தொடங்கியபோது, அரசாங்கம் வழங்கியதாகக் கூறப்பட்ட ஆயுதங்கள் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
LTTE யினர் தங்களை தமிழர்களின் ஒரே ஏக பிரதிநிதியாகக் கருதினர். இதுதான் 1990 மே மாதத்தில் பேச்சுவார்த்தையின்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியது.
பிரேமதாசா அரசாங்கம் EPRLF இயக்கத்துடனும் பேசத் தொடங்கியது. இதனை LTTE யினர் ஏற்கவில்லை, மாறாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், EPRLF தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று வாதிட்டனர். ஆனால் தமிழர்களின் அனைத்து தரப்புக்களுடனும் பேசுவது அவசியமென்று அரசாங்கம் கூறியது. இவ்வாறான இருதரப்பு முரண்பாடானது பேச்சுக்களில் சிக்களை ஏற்படுத்தியது.
LTTE யினரின் அரசியல் நிலைப்பாடானது இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குள் “அதிகாரப் பகிர்வு” என்ற அளவில் மட்டும் இருக்கவில்லை, மாறாக அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் நீக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது.
அதே சமயம் EPRLF தரப்பில் இருந்து வந்த அரசியல் கோரிக்கைகளும் அரசாங்கத்தில் விவாதிக்கப்பட்டன.
LTTE ஒரு அரசியல் அமைப்பாக மட்டுமல்லாமல், வடகிழக்கில் ஆயுதப் படை, பொலிஸ் போன்ற அமைப்பு, வரி வசூல், நீதித்துறை செயற்பாடு, உள்ளூர் நிர்வாகம், காவலரன்கள் போன்றவற்றை நடத்தி வந்தனர்.
அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக நாட்டின் இறையாண்மையை வைத்திருந்தாலும், வடகிழக்கில் LTTE தனி அதிகார மையமாக இருந்தது. இது தென்னிலங்கையிலும் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக தலையிடியை ஏற்படுத்தியது.
அமைச்சர் ACS. ஹமீட் 28.05.1990 இல் யாழ்ப்பாணம் சென்று LTTE தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், LTTE வரி வசூல் செய்தல், இந்திய மீனவர்களை கடத்துதல், மீட்புப்பணம், யானைத் தந்தம், மரம் வெட்டுதல், மரம் வெட்டுவதற்கான அனுமதி, கடற்பரப்பில் ஆயுத இயக்கம் போன்ற நடைமுறைப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
பின்பு 01.06.1990 அன்று LTTE பிரதிநிதிகள் ஜனாதிபதி பிரேமதாசாவை அவரது கொழும்பு சுச்சரித்த இல்லத்தில் சந்தித்தனர். அதாவது இரண்டாவது ஈழப் போர் ஆரம்பிக்கப்பட்ட 11.06.1990 அன்று போர் தொடங்குவதற்கு வெறும் பத்து நாட்களுக்கு முன்பு பிரேமதாசாவின் இல்லத்தில் இந்த பேச்சு நடைபெற்றது.
இந்தநிலையில் 10.06.1990 அன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் அருகில் முன்னூறுக்கு அதிகமான LTTE போராளிகள் குவிக்கப்பட்டனர். இதனால் போர்ப்பதட்டம் நிலவியது.
தொடரும்..............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
