பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, காத்தான்குடி C.B. காசீம் சந்தி — டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (Beach Road) திருத்தம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வீதியின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வீதிப் பணிகளை மிக அவசரமாக நிறைவு செய்து, பொதுமக்களின் போக்குவரத்திற்கு விரைவாக வீதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், கடைகள் மூடப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்து குறைவாகக் காணப்படும் இரவு நேரத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, குறித்த பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தற்போது உரிய இடத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது, வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய அவர், பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன், பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, பணிகளை மிக விரைவாகவும் தரமாகவும் நிறைவு செய்யுமாறு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான வீதியாக இது காணப்படுவதால், வீதிப் புனர்நிர்மாணப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்து, மக்கள் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் வீதியை விரைவில் செப்பனிட்டு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நகர சபையின் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக வழங்குமாறும் நகர சபை தவிசாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன்போது, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர், நகர சபை உறுப்பினர் இ.எம் றுஸ்வின், பொறுப்பான உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருந்தனர்.





