எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் ஐந்தாம் வட்டாரத்தில் வதியும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி ஒன்று சனிக்கிழமை (26) மாநகர சபை நீச்சல் தடாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்களின் உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான, திறமையான இளைஞர் தலைமுறையை உருவாக்குவதும், விளையாட்டுத் திறனை வளர்க்கும் நோக்கிலும் இந்த நீச்சல் போட்டி ஏற்பாடு செய்து நடத்தி முடிக்கப்பட்டது.
புத்தளம் மாநகர சபை உறுப்பினராக, மாநகர சபையின் சேவைகளை வட்டார மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதுடன் மட்டுப்படுத்தி விடாமல், வட்டார மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன், திறமை மற்றும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.முர்ஷித் பூரண அனுசரணையுடன் வட்டாரத்தை மையப்படுத்தி இந்த போட்டியை நடாத்தியுள்ளார்.
வட்டாரத்தின் வளர்ச்சி என்பது கட்டடங்களிலும், வீதிகளிலும் மட்டும் அல்லாமல் மாணவர்களின் திறமையான எதிர்காலத்திலும் தங்கியுள்ளதாக தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் முர்ஷித்,
மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களின் எதிர்கால பயணத்திற்கு துணை நிற்பது ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக தனது பொறுப்பு வாய்ந்த கடமையுமாகும் என தெரிவித்தார்.
போட்டிகளில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியாக பெற்றோர்களும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துக் கொண்டமையும் சிறப்பம்சமாகும்.
இந்த தனது முதல் முயற்சிக்கு தன்னுடன் கைக்கோர்த்து தனக்கு பக்க பலமாக இருந்த நேச்சர் விளையாட்டு கழக தலைவர், நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஹிசாம் கானுக்கு மாநகர சபை உறுப்பினர் முர்ஷித் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.














