(எழுத்து - வை.அறபாத்)
சவுதி அரேபியா மீதான தற்கால பிராந்திய அச்சுறுத்தல்களும் யமன் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் மாபெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன.
சவுதி அரேபியாவின் இறையாண்மையை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இத்தகைய வன்முறைச்செயல்கள், அப்பிராந்தியத்தின் இஸ்திரத்தன்மையை குலைப்பதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் இஸ்தம்பிக்கச் செய்து சாதாரண பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளன.
புனிதத்தலங்களைக் கொண்டுள்ள இப்பிரதேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படும் போது, அது உலகெங்கிலுமிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக மற்றும் பிராந்திய மையத்தையே நேரடியாக அச்சுறுத்துவதாக அமைகிறது.
யமன் முனையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சவுதி அரேபியாவின் பிராந்தியப் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிரையும் குறிவைப்பது சர்வதேச சட்டங்களுக்கும் மனிதநேய நெறிமுறைகளுக்கும் முரணான செயலாகும்.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் இத்தாக்குதல்கள் வெறும் அரசியல் அதிகாரப்போட்டி மட்டுமல்லாமல், சவுதி பூமிக்குள் பயத்தையும் இஸ்திரமின்மையையும் விதைக்கும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளாகும்.
சவுதி அரசு தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் எடுக்கக்கூடிய தற்காப்பு நடவடிக்கைகளும் பிராந்திய அமைதியை நிலைநாட்ட முன்னெடுக்கும் முயற்சிகளும் தற்காலச்சூழலில் மிகவும் அவசியமானவையாகும்.
இச்சூழலில் குழப்பங்கள் நீடிப்பதும், பாதுகாப்புக் குலைக்கப்படுவதும் பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் சமூக வளர்ச்சியையும் கடுமையாகப்பாதிக்கும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.
பொதுவான மனிதநேய மற்றும் தார்மீகப் பார்வைகளின்படி, எந்தவொரு நாட்டின் அமைதியைக் குலைப்பதும், அப்பாவி மக்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க குற்றமாகும்.
உலகளாவிய ஒழுக்கநெறிகள் எப்போதும் அமைதிப் பேணலுக்கும், மனித உயிர்களின் பாதுகாப்பிற்கும் முதலிடமளிக்கின்றன. போர்ச்சூழலிலும் கூட பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென்ற சர்வதேச விதிமுறைகளும் மனிதாபிமானக் கோட்பாடுகளும் வலியுறுத்தப்படுகின்றன.
எனவே, நியாயமற்ற முறையில் அப்பாவி மக்கள் மீதும் முக்கியமான பிராந்தியங்கள் மீதும் பயத்தை ஏற்படுத்துவது நாகரிக சமூகத்தின் விழுமியங்களுக்கு முற்றிலும் முரணான செயலாகும்.
இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் அதன் இறையாண்மைக்கு உலகளாவிய சமூகம் மற்றும் பிராந்திய நலனில் அக்கறையுள்ள அனைவரும் உளப்பூர்வமாக துணையாக நிற்க வேண்டியது அவசியமான கடமையாகும். சவுதி அரேபியாவின் இஸ்திரத்தன்மை என்பது பிராந்தியத்தின் பலத்துடன் நேரடியாகத் தொடர்புடையது.
எனவே, எல்லைகளுக்கப்பால் ஒற்றுமையுடனும், சவுதியின் பாதுகாப்புக்கு ஆதரவாகக்குரல் கொடுப்பதன் மூலமாகவும் மட்டுமே இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிக்க முடியும்.
ஆயுத மோதல்களும் வன்முறைகளும் எப்போதுமே நிலையான தீர்வைத்தராது என்பதால், பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச இராஜதந்திர வழிகள் மூலமாகவே பிராந்தியத்தில் நிரந்தர நிம்மதியையும் பாதுகாப்பையும் மீட்டெடுக்க இயலும்.

