நூருல் ஹுதா உமர்
சமூக வலைதளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சும் உடனடியாக தலையிட வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, இலங்கையர்கள் என்ற வகையில் எம் அனைவரது உள்ளங்களையும் உலுக்கும் செய்தியாகும்.
இவ்வாறான ஒரு தருணத்தில் எமக்கு முதலில் நினைவுக்கு வருவது திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் சகோதரியாவார். வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த அவர், குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
அவரை விடுதலை செய்யுமாறு அன்றைய காலகட்டத்தில் இலங்கை மக்கள் ஜாதி, மத பேதமின்றி குரல் கொடுத்த போதிலும், இறுதியில் அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று அனோஜனுக்கும் அதே நிலைமை ஏற்பட அனுமதிக்கலாமா என்பதே நாம் அனைவரும் நம்மை நோக்கிக் கேட்க வேண்டிய கேள்வியாகும்.
சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை எனக் கூறப்பட்டாலும், இஸ்லாத்தின் அடிப்படைப் பண்புகள் குறித்து நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
இஸ்லாத்தின் உண்மையான சாராம்சம் தண்டனை மாத்திரமல்ல; கருணை, மன்னிப்பு மற்றும் இரக்கமும் அதன் முக்கியமான போதனைகளாகும். நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இதற்கான பல்வேறு முன்னுதாரணங்கள் காணப்படுகின்றன.
தம்மைத் துன்புறுத்தியவர்கள், அவமதித்தவர்கள் மற்றும் கல்லெறிந்தவர்களிடமும் நபிகள் நாயகம் மன்னிப்பு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தியதாக இஸ்லாமிய வரலாற்றில் பதிவுகள் காணப்படுகின்றன. மக்கா வெற்றியின் பின்னரும் தமக்கு எதிராகப் போராடிய பலருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டமை வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
எனவே, நபிகள் நாயகத்தின் மன்னிப்பு மற்றும் கருணை போதனைகளை முன்னிறுத்தி, அனோஜன் விடயத்திலும் சவூதி அரேபிய அரசு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்படும் எந்தவொரு கருத்தும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடியது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அதேவேளை, தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்பையும் கருணையையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் கருத்திற்கொள்ள வேண்டும்.
தன்னை இஸ்லாமிய அரசாக முன்னிறுத்தும் சவூதி அரேபியா, இவ்விடயத்தில் இஸ்லாத்தின் கருணை, மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். ஒரு தனிநபருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது இஸ்லாத்தின் மீதான புரிதலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இலங்கை முஸ்லிம்களின் சார்பாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் எமது கோரிக்கை ஒன்றே — சவூதி அரேபிய அரசு இந்த விடயத்தை கருணையுடன் பரிசீலித்து, அனோஜன் சகோதரருக்கு மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றி விடுதலை செய்ய வேண்டும்.
ரிசானா நபீக்கிற்கு ஏற்பட்ட துயரமான முடிவு மீண்டும் இடம்பெறக் கூடாது. அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சும் உடனடியாக இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, சவூதி அரேபிய அரசாங்கத்திடம் மன்னிப்புக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் எனவும் கலீலுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

