எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் ஏற்பாட்டில் "இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்" எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் கல்வி முகாம், 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் வரலாற்றுப் பின்னணி, அதன் தோற்றமும் வளர்ச்சியும், தற்போதைய சட்ட நிலை, சட்ட சீர்திருத்தங்கள், நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சமகால சவால்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை ஆழமாக ஆராயும் வகையில் இக்கல்வி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் எச். அஜ்மல் மற்றும் வாரிஸாதுல் இஸ்லாஹிய்யா அமைப்பின் தலைவி அஷ்ஷெய்கா நும்ரா ஸாஜிதா (இஸ்லாஹி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும், காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், மன்பவுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் றியாஸ் (தேவ்பந்தி), பாக்கியாதுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஜெம்ஸித் (ரஷாதி), பாத்திமா பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் திருமதி சரீனா பர்வீன், சாஹிரா ஆரம்பப் பாடசாலை பிரதி அதிபர் ஹஸீப், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி முகாமையாளர் ஏ.ஆர்.ஏ. அஸீம் பஸ்ரி, பிரதி அதிபர் அஷ்ஷெய்க் என்.எம். ஜாஸில் உள்ளிட்ட கல்வியாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கல்வி முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்கள் தொடர்பில் ஆழமானதும் அறிவுபூர்வமானதுமான உரைகளை வழங்கினர்.
அவர்களில், ஜாமிஆ நளீமிய்யா கல்வி நிகழ்ச்சித் திட்டத் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி),
ராபிததுந் நளீமிய்யீன் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் எம்.எஸ்.ஷமீல் (நளீமி), மஹகும்புக்கடவல உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் அலா அஹ்மத் (நளீமி), உடபலாத கம்பளை பிரதேச காதி நீதவான்
அஷ்ஷெய்க் அனஸ் அஹ்மத் (நளீமி),காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி
அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் முக்கிய வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இக்கல்வி முகாமின் போது இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் வரலாற்று வளர்ச்சி, திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்ட ஏற்பாடுகள், காதி நீதிமன்றங்களின் பங்கு, சட்ட சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள், முஸ்லிம் பெண்களின் உரிமைகள், சமகால சட்ட மற்றும் சமூகச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இக்கல்வி முகாம் வெறுமனே சட்ட விடயங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக அமைந்ததுடன் மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான வரலாற்று, மார்க்க, சட்ட மற்றும் சமூகப் புரிதல்களை ஒருங்கிணைத்து ஆராய்வதற்கான பயனுள்ள கல்வித் தளமாகவும் அமைந்தது.
மூன்று நாட்களிலும் இடம்பெற்ற விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றங்கள் பங்கேற்பாளர்களுக்கு இத்துறையில் தெளிவானதும் ஆழமானதுமான புரிதலை ஏற்படுத்தியதுடன், குறிப்பாக எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பான அறிவார்ந்த சமூக கலந்துரையாடல்களையும் ஆய்வுகளையும் முன்னெடுப்பதற்கான உந்துதலையும் வழங்கின.
இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கல்வி முகாம், இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான அறிவை மேம்படுத்துவதிலும், சட்டம் குறித்த சமநிலையான மற்றும் பொறுப்பான புரிதலை உருவாக்குவதிலும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.


























