எம்.யூ.எம்.சனூன்
"புரட்சிகர மாற்றம் 2026" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை அண்மைக்காலமாக சகல துறைகளிலும் அதன் அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான் தலைமையில் மாற்றம் அடைந்து வருகிறது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 89 சதவீத சித்தியைப் பெற்று கல்பிட்டி கல்விக்கோட்த்தில் முதல் முறையாக மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சையில் சாதித்த இளம் சாதனையாளர்களை ஊக்குவித்து பாராட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (08) காலை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்பிட்டி கல்விக்கோட்ட பணிப்பாளர் ஏ.எம். ஜவாத் அவர்களும், விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும், பெற்றோர்களும் பங்கு பற்றினர்.
இந்த பாராட்டு நிகழ்வில் சகல மாணவர்களுக்கும் பரிசில்கள், பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பரீட்சையில் தமிழ் மொழி மூலம் எஸ்.எப்.றீஹா என்ற மாணவி 135 புள்ளிகளையும், சிங்கள மொழி மூலம் யெனுல் தெவ்மிக என்ற மாணவன் 139 புள்ளிகளையும், நிஹன்சா செனுகி என்ற மாணவி 139 புள்ளிகளையும் பெற்று ஏத்தாளை பாடசாலையின் வரலாற்று புத்தகத்தின் பக்கங்களில் தமது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளனர்.
இந்த வெற்றியை பெற்றுத்தர உதவிய வகுப்பாசிரியர்களான முஸ்லிஹா மற்றும் நிலந்தி பெர்னான்டோ ஆகியோரின் அயராத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.
மேலதிக வகுப்புக்களை வழிநடாத்திய அருணாகரன், அயாஸ்கான், இஸ்ஸத் ஆகிய ஆசிரியர்களுக்கும், பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களுக்கும், துணை நின்று தோல் கொடுத்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை அதிபர் தெரிவித்துள்ளார்.




