(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி கண்டக்குழி குடாவில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழப்பு
கற்பிட்டி கண்டக்குழி குடாவின் வீதி வழியாக மோட்டார் சைக்கிள் தந்தையும் மகனும் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் அச்சமயம் எதிர்பாராத விதமாக பின்னால் பொலிஸ் ஜீப் ஒன்று வருவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் செலுத்திய தந்தை பதற்றமடைந்து மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோதி மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய துஷ்மந்த ரக்ஷபக்ச (வயது 40) மற்றும் அவரது 7வயது மகன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு விபத்து நடந்த தருணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரினதும் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
