JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனையில் ஆரம்பமான இரண்டாவது ஈழப்போர்.

23 வது தொடர்.........

10.06.1990 அன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் மறுநாள் 11.06.1990 அன்று கல்முனையில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த இராணுவத்தினர் மீது LTTE நடத்திய தாக்குதலில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட இராணுவத்தினர் அந்த இடத்திலேயே டயர் போட்டு எரிக்கப்பட்டனர். அதே தினத்தில் கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் இராணுவ முகாம் தாக்குதலுக்குள்ளானது. அதிலிருந்த எட்டு இராணுவத்தினர் கடல் வழியாக தப்பிச் சென்றனர். ஆனால் ஏனைய இராணுவத்தினருக்கு என்ன நடந்தென்ற பதிகள் இல்லை.  

கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர், 11.06.1990 அன்று காலை வழமை போன்று சாய்ந்தமருது கடற்கரையில் மீன் வாங்கிக்கொண்டு எங்களது இல்லம் அமைந்துள்ள அல்-ஹிலால் வீதி வழியாக ட்ரக்கில் சென்றதனை கண்டேன். சிறுது நேரத்தில் அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. அதுவரைக்கும் நாட்டில் பதட்டமின்றி அமைதியான சூழல் நிலவியது. 

அதே தினத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐந்து பொலிஸார் (A.M. Ameer Ali, M.M. Haniffa, U. Salim, A. Abdul Jaffer, M.Y.M. Hassim) 11.06.1990 அன்று LTTE யினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை முஸ்லிம்களுக்கு எதிரான கொலை என்று யாரும் கருதவில்லை.  இது பொலிசாருக்கு எதிரான LTTE யினரின் தாக்குதல் என்றுதான் கருதப்பட்டது.  

மேலும் அதேதினத்தில், 11.06.1990 அன்று கிழக்கிலுள்ள வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களை LTTE யினர் சுற்றிவளைத்தனர். 

LTTE யினர் கிழக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களைச் சுற்றிவளைத்தபோது, அங்கு இருந்த பொலிசாரில் கணிசமானவர்கள் முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள்.

அவர்களிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுமாறும், அவ்வாறு சரணடைபவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் LTTE யினரினால் உத்தரவாதம் வழங்கப்பட்டது. 

இந்த சுற்றிவளைப்பின்போது பதில் தாக்குதல் நடத்தாமல் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுமாறு அரசாங்கத்தினால் பொலிசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

அன்றைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தை இன்னமும் முறிந்துவிடவில்லை, முடியுமானவரையில் பேச்சினை தொடரலாம் என்று பிரேமதாசா நம்பியதுதான் பொலிசாரை சரணடயுமாறு உத்தவிட்டதுக்கு காரணமாகும். 

ஆனால் சரணடைந்த அனைத்து பொலிசாரின் கைகளும் கட்டப்பட்டு வாகனங்களில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டு, அதில் இருந்த 600க்கு மேற்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசார் அனைவரும் கொலை செய்யப்பட்டனர்.  

வடக்கில் அமைதியும், கிழக்கில் போர்ப் பதட்டமும் உருவான நிலையில், மீண்டும் ஒரு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் A.C.S. ஹமீத், பலாலி விமானத் தளத்தில் இறங்கி, LTTE யினரின் வாகனங்களில் சுமார் 10 மைல் தொலைவில் இருந்த LTTE முகாமில் மாத்தையா, அன்டன் பாலசிங்கம், யோகி ஆகியோரை சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் மறுநாள் முதல், போர் நிறுத்தம் அமல்படுத்துவது குறித்து உடன்பாடு ஏற்பட்டதாக பதிவுகள் உள்ளது.  

ஆனால் அடுத்த நாள் இறுதி முயற்சியாக, 16 ஜூன் 1990 அமைச்சர் ஹமீத் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று LTTE பிரதிநிதிகளுடன் சுமார் ஆறு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை முடிந்து அமைச்சர் பலாலி விமானத் தளத்திற்குத் திரும்பியபோது, LTTE யினர் பலாலி விமானத் தளத்தை நோக்கி எறிகணை தாக்குதல் நடத்தினர். 

அமைச்சர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே ஒரு எறிகணை வெடித்ததில் அருகில் நின்றிருந்த ஒரு விமானப்படை அதிகாரி காயமடைந்தார். இதன் மூலம் சமாதானத்துக்கான இறுதி முயற்சியும் தோல்வியடைந்தது. 

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இரண்டாம் ஈழப் போர் 11.06.1990 அன்று தொடங்கியிருந்தும், இறுதி முயற்சியாக ஐந்து நாள் கடந்த நிலையிலும் 16.06.1990 திகதி அமைச்சர் பேச்சு நடத்துவதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார் என்பதுதான். 

தொடரும்.................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال