✍️ எஸ். சினீஸ் கான்
அப்ஹா, காமிஸ் முஷைத், ஜாஸான் மற்றும் நஜ்ரான் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பொருளாதார இலக்குகளை பயங்கரவாத ஹூதி தீவிரவாதிகள் குறிவைத்து மேற்கொண்ட தாக்குதல்களை சவூதி அரேபிய இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு தனது மிகக் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹூதி தீவிரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களையும், சர்வதேச கடல்சார் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்துக்கு அவர்கள் ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல்களையும் சவூதி அரேபியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
சகோதரத்துவ நாடான ஏமன் குடியரசின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கும், அதனைச் சூழவுள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஹூதி தீவிரவாதிகளின் பகைமை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை சவூதி அரேபியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அத்துடன், அனைத்து அமைதி முயற்சிகளையும் தொடர்ந்து நிராகரித்து வரும் அவர்களின் அணுகுமுறைக்கும் சவூதி அரேபியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தனது இறையாண்மையையும் தேசிய வளங்களையும் பாதுகாப்பதற்கும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் தனது நியாயமான உரிமையை சவூதி அரேபியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, தனது நிலப்பரப்பு அல்லது தேசிய வளங்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலையும் சவூதி அரேபியா சகித்துக்கொள்ளாது என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அப்பாவி பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகளை தொடர்ந்து குறிவைப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஹூதி தீவிரவாதிகளுக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அனைத்து வகையான பதற்ற அதிகரிப்புகளையும், கடல்சார் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சமூகம் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானங்களை, குறிப்பாக தீர்மானம் 2216 (2015) மற்றும் தீர்மானம் 2722 (2024) ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சவூதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.

