JobVibe.lk - Sri Lanka Job Portal

போலிச்செய்திகளின் பின்னால் ஒழிந்திருக்கும் வன்ம அரசியல் : ஆபத்தாக மாறும் முதிர்ச்சியற்ற போக்கு

(நிசப்தம்)

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் மக்களின் உணர்வுகளைக்கையாளும் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளன. குறிப்பாக, கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் சந்தித்த கசப்பான அனுபவங்கள், அநீதிகள் மற்றும் அவற்றால் உருவான கோபத்தையும் கவலையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள சில சுயநலச் சக்திகள் திட்டமிட்டுச்செயற்பட்டு வருகின்றன.

கடந்த கால ஆட்சிக்காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகள் காரணமாக, மக்கள் மத்தியில் ஒருவிதமான கவலையும், குறிப்பிட்ட அரசியல் தரப்புகள் மீது நியாயமான வெறுப்பும் நிலவுகிறது. இந்த உண்மையான மக்கள் கோபத்தை உணர்ந்து கொண்ட சில சதியாளர்கள், அதனைத்தங்களுக்குச் சாதகமாக மாற்ற குறுக்கு வழியைக்கையாண்டு வருகிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறாத, யோசிக்கக்கூட முடியாத கருத்துக்களை அவர் கூறியதாகப் போலியான செய்திகளை உருவாக்கி ஊடகங்களில் உலாவ விடுவதே இவர்களின் முதன்மை உத்தியாக இருக்கிறது. இதன் மூலம், அநீதிகளுக்குக் காரணமானவர்கள் மீது இருக்க வேண்டிய மக்களின் கோபத்தையும் ஆத்திரத்தையும், சொந்த சமூகத்தின் தலைவர் மீது திருப்புகின்ற மிக மோசமான, வன்மத்தனமான செயல் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறான நுட்பமான சூழ்நிலையில், "எந்தவொரு தலைவராவது இப்படி வெளிப்படையாகப் பேசுவாரா?" என்று அடிப்படை அறிவோடு யோசித்துக்கூடப் பார்க்காமல், சமூக வலைத்தளங்களில் வரும் போலிப் பதிவுகளை அப்படியே நம்பிப்பகிரும் போக்கை சில பயனர்களிடம் காண முடிகிறது. 

ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல், உணர்ச்சிவசப்பட்டு வன்மமான கருத்துக்களையும் ஏச்சுக்களையும் பதிவிடுவது ஒருவரின் அறியாமையையும் முதிர்ச்சியற்ற ஆளுமையையுமே வெளிப்படுத்தி நிற்கிறது.

போலிச்செய்திகள் என்பதை உணராமல் கண்மூடித்தனமாகச் செயற்படும் இத்தகைய போக்குகள் கடுமையாகக்கண்டிக்கப்பட வேண்டியவை மாத்திரமன்றி, சமூகத்தின் எதிர்காலத்திற்கே ஆபத்தானவை. உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை தராமல், அறிவிற்கும் பகுத்தறிவிற்கும் முன்னுரிமை அளிப்பதே ஒரு முதிர்ச்சியடைந்த சமூகத்தின் அடையாளமாகும்.

எந்தவொரு செய்தி சமூக வலைத்தளங்களில் வந்தாலும், அதன் உண்மைத்தன்மையை நம்பகமான ஊடகங்கள் மூலம் சரிபார்ப்பதும், உணர்ச்சியைத் தூண்டும் செய்திகளின் பின்னணியிலுள்ள சூழ்ச்சியைப்புரிந்து கொள்வதும் அவசியமாகும். 

ஆதாரமற்ற தகவல்களைப்பகிர்வதையும், அதன்மூலம் வன்மத்தைப்பரப்புவதையும் முற்றாகத் தவிர்த்து நிதானத்தோடும் விழிப்புணர்வோடும் செயற்படுவதே இத்தகைய வன்ம அரசியலுக்கு நாம் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال