இந்திய படையினர்களை வெளியேற்றுதல் என்பது ஆர். பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம். ஆட்சிக்கு வந்ததும் இலங்கையிலிருந்து 1989 ஜூலை 31 ஆம் திகதிக்குள் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய படையினர் LTTE யினருடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே பிரேமதாசாவுக்கும், புலிகளுக்கும் இடையில் இரகசிய உறவுகள் இருந்ததாகவும், புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தது.
வடகிழக்கு மாகாண சபைக்காக உருவாக்கப்பட்ட சட்டரீதியான CVF படையணி பலயீனமடைந்தது. இந்தியப் படையினர் வெளியேறிய பின்பு வடகிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுந்தது. அங்கு உருவாகும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்பி LTTE யினரின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது.
இதற்காக EPRLF யின் முக்கிய பங்களிப்பு மற்றும் ENDLF, TELO ஆகிய இந்திய ஆதரவு பெற்ற தமிழ் இயக்கங்களின் ஒத்துழைப்புடன் TNA (Tamil National Army) என்ற பெயரில் படையணி உருவாக்கப்பட்டது.
TNA என்னும் தமிழ் இராணுவத்தை உருவாக்குவதற்கான அனைத்து உதவிகளையும் இந்திய புலனாய்வு அமைப்பான RAW வுடன் இணைந்து இந்தியப் படையினர் மேற்கொண்டனர். இவர்களுக்கு AK47, T56 உட்பட சக்திமிக்க ஆயுதங்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டது.
இதற்கு ஆட்சேர்க்கும் முறையானது CVF ஐ விட மிகவும் கொடூரமானதாக இருந்தது. அதாவது பேருந்துகள், சந்தைகள், பாடசாலைகள், தனியார் வகுப்புக்கள் ஆகியவற்றுக்கு சென்ற தமிழ் இளைஞர்கள் கட்டாயத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி முகாம்களில் இணைக்கப்பட்டனர்.
1989 நடுப்பகுதியில் இவ்வாறான பலவந்தமான ஆட்சேர்ப்புக்கள் இடம்பெற்றது. இதனால் சில தமிழ் பெற்றார்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கும் அஞ்சினர். இன்னும் சிலர் இளவயதில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
இந்தியப் படையினரை வெளியேறுமாறு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக, பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவசரமாக உருவாக்கப்பட்ட TNA என்னும் தமிழ் இராணுவத்துக்கு இந்தியப் படையினரினால் மிகவும் குறுகிய காலத்துக்குள் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதன் தளபதியாக George Thambirajah நியமிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இரண்டு மாதகால பயிற்சிகளும், இறுதியாக சேர்க்கப்பட்டவர்களுக்கு சில வாரங்கள் பயிற்சி வழங்கப்பட்டு களத்துக்கு அனுப்பப்பட்டனர். இதனால் இவர்களிடம் போதிய இராணுவ அனுபவமோ, போரிடும் ஆற்றலோ, மன வலிமையோ இருக்கவில்லை.
1989 அக்டோபர் 25 அன்று அம்பாறை மாவட்டத்திலிருந்து முதலாவது இந்திய படைத் தொகுதி வெளியேறியது. இந்தியப் படையினரின் வெளியேற்றத்தின் பின்பு அம்பாறை மாவட்டத்தினை TNA பொறுப்பேற்றது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட TNA, தன்னை வடகிழக்கு மாகாண பாதுகாப்புப் படையாக கருதியதனால், இலங்கை பொலிசாருக்கும், TNA க்கும் இடையில் அதிகார போட்டி நிலவியது.
1989.11.17 அன்று அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை, அக்கரைப்பற்று ஆகிய நான்கு பிரதான பொலிஸ் நிலையங்கள் மற்றும் காரைதீவு உப பொலிஸ் நிலையம் ஆகியன ஒரே நேரத்தில் சுற்றி வளைக்கப்பட்டு TNA யினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை, அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் நிலைய தாக்குதலில் TNA தோல்வியடைந்ததுடன், காரைதீவு உப பொலிஸ் நிலைய தாக்குதலில் 43 முஸ்லிம் பொலிசார் கொல்லப்பட்டனர். அங்கு கடமையிலிருந்த தமிழ் பொலிசாரை விடுவித்தனர்.
ஜனாதிபதி பிரேமதாசாவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக இந்திய படையினர் வெளியேறிய பின்பு வடகிழக்கு பிரதேசங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு LTTE யினருக்கு இருந்தது.
அதற்கு அமைவாக, 1989 நவம்பர் 5 அன்று திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய பகுதிகளில் இருந்த TNA யினரின் முகாம்களை ஒரே நேரத்தில் LTTE யினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் திருக்கோவில் TELO வின் கட்டுப்பாட்டிலும், தம்பிலுவில் EPRLF யின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.
இந்தத் தாக்குதலில் 36 TNA படையினர் கொல்லப்பட்டு, நூறுக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு, பலர் சரணடைந்ததுடன், பெருமளவான ஆயுதங்களும் LTTE யினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த தாக்குதல் மூலமாக TNA யினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு கிழக்கு மாகாணம் முழுவதும் புலிகளின் மோதல் விரிவானதுடன் TNA யின் பலயீனமும் வெளிப்பட்டது.
TNA க்கு எதிராக LTTE யினரின் தாக்குதல் தீவிரமானதன் காரணமாக பலவந்தமாக சேர்க்கப்பட்ட பல இளைஞர்கள் தப்பிச்சென்றனர். சிலர் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, இன்னும் சிலர் பணத்துக்கு விற்பனை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். பலர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர்.
1989 டிசம்பரில் நடந்த மோதலில் 44 TNA உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், 155 பேர் பெருமளவான ஆயுதங்களுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர்.
இன்னும் பல TNA உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்றனர். 1989 இறுதியிலிருந்து 1990 ஆரம்பம் வரை LTTE யினர், தொடர்ந்து TNA முகாம்களையும் அதன் உறுப்பினர்களையும் வேட்டையாடினர்.
சில இடங்களில் TNA உறுப்பினர்கள் சரணடைந்த பின்னரும் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மட்டக்களப்பு பகுதியில் பெருமளவான TNA உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், மொத்தமாக 500 க்கு மேற்பட்டவர்கள் LTTE யினரால் கொல்லப்பட்டதாக பதிவுகள் உள்ளது. ஆனால் சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெயவில்லை.
இந்தியப் படையினர் முற்றாக நாட்டைவிட்டு வெளியேறிய பின்பு, LTTE யினரை தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை TNA க்கு ஏற்பட்டது. ஆனால் அவ்வாறு எதிர்கொள்ளும் ஆற்றல், ஒழுங்கமைப்பு, உறுதியான தலைமைத்துவ வழிகாட்டல் அவர்களிடம் இருக்கவில்லை.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், சில TNA உறுப்பினர்கள் தங்களது ஆயுதங்களை விலைக்கு விற்றுவிட்டு அந்த பணத்தின் மூலமாக கொழும்பில் தங்கியிருந்து பின்பு வெளிநாடு சென்றதான தகவல்களும் உள்ளன. அவ்வாறென்றால், அவர்களுக்கு பணம் வழங்கி ஆயுதங்களை பெற்றுக் கொண்டவர்கள் யார் ?
தொடரும்...............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
