JobVibe.lk - Sri Lanka Job Portal

உயர் மட்டத்தில் உறவும், கீழ் மட்டத்தில் கொலை முயற்சியும்.

19 வது தொடர்........... 

நேற்றைய 18வது தொடரில் அரசியல் பிரமுகரான வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர் MYM. மன்சூர் அவர்களை 1990 இல் கடத்திச் சென்றது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதுபோன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை கொலை செய்வதற்கான முயற்சிகள் பற்றி இன்னும் சில விடுபட்ட குறிப்புக்களை பதிவிடும் நோக்கில் சற்று பின்னோக்கிச் செல்கிறேன்.

22.08.1989 அன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். அஷ்ரப்பை கொலை செய்வதற்கான முயற்சி ஒன்று நடைபெற்றது. 

அதாவது இந்திய படையினரால் கட்டியமைக்கப்பட்டு, இந்திய படையினரின் அனுசரணையுடன் இயங்கிவந்த ENDLF இயக்கத்தினர் அஷ்ரப்பை கொலை செய்வதற்கான முயற்சில் ஈடுபட்டனர்.

தலைவர் அஷ்ரப் அவர்கள் மருதமுனையில் இருந்தபோது அவரை பின்தொடர்ந்துவந்து துரத்தியபோது, அஷ்ரப் அவர்கள் வீதியால் ஓடாமல், ஒரு வளவுக்குள் புகுந்து, ஒவ்வொரு வளவின் மதில் வழியாக பாய்ந்து சென்று ஓடியதனால், அவரை கொலை செய்வதற்கு அல்லது கடத்துவதற்கான ENDLF யின் முயற்சிகள் தோல்வியடைந்தது. 

பின்பு கல்முனை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதும், ரபீக் தலைமையிலான கல்முனை பொலிசார் ஸ்தலத்துக்கு விரைந்துவந்து அஷ்ரப்பை மீட்டுச் சென்றனர். இதன் நன்றிக்கடனாகவே ரபீக் அவர்கள் இறுதி வரைக்கும் அஷ்ரப் அவர்களின் மெய்காப்பாளராக பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.   

மேலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த MI. அலி உதுமான் அவர்கள் 01.08.1989 அன்று அக்கரைப்பற்றில் வைத்து ENDLF இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலில் அவருடன் இன்னும் இரண்டுபேர் கொல்லப்பட்டனர். 

ENDLF உறுப்பினர் ஒருவரை LTTE யினர் சுட்டுக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ENDLF உறுப்பினர்கள், அக்கரைப்பற்று நகரில் கட்டுப்பாடின்றி செயற்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்பிரதேச மக்களை அச்சுறுத்தி, வீடுகளைத் தாக்கினர். 

பின்னர் இந்தியப் படையினர் ஒரு கண்துடைப்புக்காக அக்கரைப்பற்றிலுள்ள ENDLF அலுவலகத்தை முற்றுகையிட்டு, ENDLF உறுப்பினர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். பின்பு சில நாட்களில் பறிக்கப்பட்ட ஆயுதங்கள் மீண்டும் வழங்கப்பட்டது. 

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், வடகிழக்கு மாகாண சபையில் ENDLF உறுப்பினர்கள் ஆட்சியின் பங்காளியாக இருந்தனர். 

அதாவது வடகிழக்கு மாகாண சபையில் EPRLF 41 ஆசனங்களுடன் பெரும்பான்மை பெற்றது. ENDLF 12 ஆசனங்களைப் பெற்றிருந்தது. EPRLF மற்றும் ENDLF இணைந்து மொத்தமாக 53 ஆசனங்களைக் கொண்ட பெரும்பான்மை அணியாக மாகாண நிர்வாகத்தை அமைத்தன. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17 உறுப்பினர்களுடன் எதிர்கட்சியில் அமர்ந்திருந்தாலும், இரண்டு தரப்புக்கும் இடையில் சுமூகமான உறவுகள் இருந்தன. அதாவது ஒருவரை ஒருவர் கொலை செய்கின்ற நிலைக்கு பகமைகள் இருக்கவில்லை. 

EPRLF, ENDLF ஆகிய இயக்கங்களுக்கு இந்திய படையினர் நேரடியாக ஆதரவும் பாதுகாப்பும் வழங்கியிருந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசுக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கியது. 

அத்துடன் LTTE யினரின் கொலைப் பட்டியலில் இந்த மூன்று தரப்பும் இருந்தனர். இவ்வாறான நிலையில், ENDLF யின் உயர் மட்டத்தில் பகைமைகள் இல்லாத உறவு இருந்தது. ஆனால் அடிமட்டத்தில் உள்ள போராளிகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களை கொலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தொடரும்............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




1 Comments

  1. ரபீக் என்பவர் பின்பு யாழ் மாவட்ட P உறுப்பினர் இலியாஸ் அவர்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து பண்ணியாற்றியவர் தான் நுரைச்சோலை முன்னாள் OIC ரவி என்பவர். ரவி OIC யாகி விட்டார் ஆனால் ரபீக் கடைசி வரையும். அவராகவே இருந்தார்

    ReplyDelete
Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال