நூருல் ஹுதா உமர்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர் அவர்களை ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகள், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் பிராந்திய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, மாளிகைக்காடு பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் மையவாடி தொடர்பான தேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இவ்விடயம் தொடர்பில் பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு, இருதரப்பு ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாசார பரிமாற்றங்கள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மக்கள் மட்டத்திலும் கல்வி, சமூக மற்றும் அபிவிருத்தித் துறைகளிலும் மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இலங்கை–பாகிஸ்தான் இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்களை சர்வதேச நட்புறவுகளின் ஊடாக எடுத்துரைப்பதற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாக அமைந்தது.





