எம்.யூ.எம்.சனூன்
குருநாகல் சாஹிரா கல்லூரியில் எ முஹம்மத் நபிஅவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மீலாதுன் நபி விழா (02) புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வின் முதல் அங்கமாக சாஹிராவை அழகுபடுத்தும் நோக்கில் சிரமதானப் பணி சிறப்பாக இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் மீலாதுன் நபி விழா மிக விமரிசையாக அரங்கேறியது. போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான டீ.எம். தர்மபிரிய திஸாநாயக்க, எம்.கே. அஸ்லம், குருநாகல் மாநகரசபை மேயர் ஆனந்த சஹபந்து, பிரதி மேயர் அசாருதீன், குருநாகல் பிரதேச சபை உறுப்பினர் எம்.கே.அகார்கான், குருநாகல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர், குருநாகல் வலயக் கல்விப் பணிமனையின் விளையாட்டுத்துறை பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி சந்திரிகா உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து மிகக் குறுகிய கால இரண்டு நாட்கள் வேலைத்திட்டத்தில் அனைத்து விடயங்களையும் மிக நேர்த்தியாகவும் விமரிசையாகவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவிற்கான முழுமையான நிதி மற்றும் பொருள் உதவிகளை தனவந்தர்களும், நலன்விரும்பிகளுமே பொறுப்பேற்று நடத்திக் கொடுத்தனர்.
மிக குறுகிய காலத்தில் இந்த நிகழ்வை நடாத்த பல்வேறு வழிகளிலும் கரம் கொடுத்து உதவி புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சாஹிரா அதிபர் கே.டீ.ஹாரூன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.






