(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் சமீர் சக்க்ஷேனாவை (Vice Admiral Sameer Saxena) சனிக்கிழமை (2026 ஆகஸ்ட் 29) உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான கூட்டு பயிற்சி பரிமாற்றத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இருதரப்பிற்கும் இடையில் உத்திசார் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்துடன் இணைந்து, இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் பயிற்சி வசதிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்ற கடற்படைத் தளபதி, அக்கட்டளையின் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சி பெற்று வரும் இலங்கை கடற்படைப் பணியாளர்களுடன் கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டார். அத்துடன், இலங்கை கடற்படைத் தளபதி அவர்கள், 2002 ஆம் ஆண்டு ஆயுதங்கள் தொடர்பான சிறப்புப் பாடநெறியைப் பயின்ற இந்திய கடற்படையின் INS Dronacharya பயிற்சிப் பாடசாலைக்கும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.






