(எழுத்து : வை.அறபாத்)
இஸ்லாமிய உலக வரலாற்றில் சவுதி அரேபிய இராச்சியம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை வகுத்துள்ளது. அதன் நிர்வாக அமைப்பும் ஆன்மீக வழிகாட்டலும் திருக்குர்ஆன் மற்றும் நபிவழியை (சுன்னா) அடிப்படையாகக் கொண்டவை.
நவீன காலகட்டத்தில் உலகமயமாக்கல் மற்றும் அதிவேக தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு மத்தியில், சவுதி அரேபியா தனது ஆன்மீக அடித்தளத்தை வலுவாகப்பிடித்துக்கொண்டு, திருக்குர்ஆனுக்கான சேவைகளையும் தூய அகீதாவையும் (ஏகத்துவக் கொள்கை) உலகளாவிய ரீதியில் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் அவர்களின் தலைமையின் கீழ், இராச்சியம் "விஷன் 2030" திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நவீனமடைந்து வருகிறது.
அதே வேளையில், இஸ்லாத்தின் தூய போதனைகளை சர்வதேசளவில் கொண்டு சேர்ப்பதில் இவருடைய முனைப்பு மிக முக்கியமானது. இவரது வழிகாட்டலில், மிதமான போதனைகளை நிலைநிறுத்த சர்வதேச மையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தீவிரவாதக்கருத்துக்கள் மற்றும் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணான தவறான தஃப்சீர்களைப் பரப்புவதைக் கண்காணித்துத் தடுக்கும் அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் இவ்வளர்ச்சி அதன் ஆன்மீக அர்ப்பணிப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, நவீன தொழிநுட்பக் கருவிகள் மூலம் அகீதாவையும் குர்ஆனையும் உலகிற்கு எத்திவைக்கும் வேகத்தை அதிகரித்துள்ளது.
திருக்குர்ஆனைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் சவுதி அரேபியா செய்து வரும் சேவைகள் இணையற்றவை. மதீனாவில் அமைந்துள்ள மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சிடும் வளாகம், உலகின் மிகப்பெரிய குர்ஆன் அச்சிடும் மையமாகத்திகழ்கிறது.
1984 இல் தொடங்கப்பட்ட இம்மையம், இதுவரை 350 மில்லியனுக்கும் அதிகமான குர்ஆன் பிரதிகளையும், 75க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் அதன் மொழிபெயர்ப்புகளையும் அச்சிட்டு இலவசமாக விநியோகித்துள்ளது.
மேலும், பார்வையற்றோருக்கான டிஜிட்டல் பிரெய்லி குர்ஆன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் குர்ஆன் ஓதுதலைச்சரிபார்க்கும் செயலிகள் என இச்சேவை விரிவடைந்துள்ளது.
சர்வதேசளவில் கடுமையான போர் பதற்றங்களும் பிராந்திய அரசியல் நெருக்கடிகளும் நிலவும் தற்போதைய மிகச்சவாலான காலகட்டத்திலும் கூட, சவுதி அரேபியா தனது மார்க்கப் பணியைச்சற்றும் பிற்படுத்தவில்லை.
இத்தகைய சர்வதேச அச்சுறுத்தல்களையும் தடைகளையும் கடந்து, 'மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப்போட்டியை' மக்கா அல்-முகர்ரமாவிலுள்ள புனித மஸ்ஜித் அல்-ஹராமில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது.
உலகெங்கிலுமிருந்து குர்ஆனை மனனஞ் செய்தவர்களைப் பாதுகாப்புடன் திரட்டி, இம்மாபெரும் நிகழ்வை சிறிதும் தொய்வின்றித் திறம்படச்செய்து முடித்தமை சவுதி அரசாங்கம் மற்றும் பட்டத்து இளவரசரின் ஆன்மீக உறுதிப்பாட்டிற்கும் நற்பணிக்கும் மிகச்சிறந்த சான்றாகும்.
இச்சேவைகளுக்குச் சான்றாக, உலகெங்கிலுமுள்ள சவுதி தூதரகங்களின் பணிகளைக்குறிப்பிடலாம். இலங்கையில் முன்னாள் தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களது காலத்தில் பிரம்மாண்டமான குர்ஆன் போட்டிகள் நடத்தப்பட்டு உயரிய பணப்பரிசுகள் வழங்கப்பட்ட நிலை தொடர்ந்து, தற்போது துணைத்தூதுவர் கௌரவ யாசிர் அப்துல் ரஹ்மான் அல்-ஹாஷ்மி அவர்களின் தலைமையில் சவுதி சர்வதேச குர்ஆன் போட்டிக்கு இலங்கைப் போட்டியாளர்களை முறைப்படி ஆயத்தப்படுத்தி, தேவையான ஒருங்கிணைப்புகளையும் பயண ஏற்பாடுகளையும் வழங்கி அனுப்பி வைத்த பணி பாராட்டத்தக்கது.
இதன் மூலம் இலங்கையைச்சேர்ந்த முகமது இம்தாத் சர்வதேசளவில் 3ம் இடம் பெற்றுச்சாதனை படைக்க முடிந்தமை, குர்ஆனுக்கான சவுதி அரேபியாவின் உலகளாவிய அர்ப்பணிப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சவுதி அரேபியா ஆரம்பம் முதலே அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அடிப்படையிலான தூய்மையான ஏகத்துவக்கொள்கையை நிலைநிறுத்தி வருகிறது.
இணைவைத்தல் (ஷிர்க்), பித்அத்துகள் (மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை) மற்றும் மூடநம்பிக்கைகளிலிருந்து இஸ்லாத்தைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கம்.
இருப்பினும், முஸ்லிம்களில் தூய இஸ்லாமியக் கொள்கைக்கு முரணான வழிகேடுகளையும் பிழையான கோட்பாடுகளையும் பின்பற்றக்கூடிய ஒரு சாரார், தூய இஸ்லாமியக்கொள்கையைப் போதித்து நிலைநிறுத்தும் சவுதி அரேபியாவை தவறான முறையில் மக்கள் மத்தியில் விமர்சிப்பதைக் காண முடிகிறது.
மார்க்கத்திற்கு முரணான சிந்தனைகளைக்கொண்ட இத்தகைய முஸ்லிம் தரப்பினர், உலகியல் ரீதியாக உயர் பட்டங்களைப் பெற்றுச்சமுதாயத்தில் பெரிய நிலையில் இருந்தாலும், மார்க்க நெறிமுறைகளை அணுகும் விஷயத்தில் தெளிவின்மையையே வெளிப்படுத்துகின்றனர்.
இஸ்லாத்தின் பெயரால் தூய அகீதாவுக்கு முரணான போதனைகளைப் பின்பற்றும் இவர்கள் உலகக் கல்வியில் உயர்பட்டங்களைப் பெற்றிருந்தாலும், திருக்குர்ஆனையும் சுன்னாவையும் ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் (முன்னோர்களின்) நேர்த்தியான வழிகாட்டலின்படி விளங்கத் தவறுகின்றனர்.
மார்க்கப்புரிதலில் ஏற்படும் இந்த ஆன்மீக வறுமையினாலும், கொள்கை முரண்பாட்டினாலும், தூய இஸ்லாமியக்கொள்கையை முன்னெடுக்கும் சவுதி அரேபியாவின் அகீதா சார்ந்த நிலைகளையும் ஏகத்துவப்பணிகளையும் மக்கள் மத்தியில் பிழையான தோற்றத்தில் கொண்டு செல்ல முற்படுகின்றனர்.
சவுதி அரேபியாவின் நவீனமயமாக்கல் என்பது அதன் அடிப்படை மார்க்கக்கொள்கைகளிலிருந்து விலகுவதல்ல.
மாறாக, குர்ஆனுக்கும் தூய ஏகத்துவக்கொள்கைக்கும் ஆற்றும் சேவைகளை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதாகும். தூய இஸ்லாமியக்கொள்கைக்கு முரணாகச் செயற்படுவோரின் அறியாமையினாலான விமர்சனங்களும் அரசியல் நெருக்கடிகளும் எவ்வளவு குறுக்கிட்டாலும், ஆதாரப்பூர்வமான தரவுகளும் வரலாற்றுச்சான்றுகளும் சவுதி அரேபியா தன்னைத் திருக்குர்ஆனுக்கும் தூய அகீதாவிற்குமான சேவையில் முழுமையாக அர்ப்பணித்துள்ளது என்பதைத் தெளிவாக மெய்ப்பிக்கின்றன.
