நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நல்ல ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் அரசாங்க தகவல் திணைக்களமும் Sri Lanka National Youth Services Council &Sri lanka Department Of Government Information இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் இன்று (04) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்டதன் பின்னர் தகுதியான இளம் ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து ஊடகத் துறையில் ஆர்வமுள்ள பலரும் விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில், தகுதியான இளம் பிராந்திய ஊடகவியலாளராக முபாறக் அஸ்லம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் சம்மாந்துறை பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட ஒரே இளம் பிராந்திய ஊடகவியலாளராக முபாறக் அஸ்லம் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் இலங்கை இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பயிற்சித் திட்டத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார அவர்களால் நடத்தப்பட்டது.
இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் புகைப்படக்கலை, காணொளி தயாரிப்பு, அறிவிப்பாளர் பயிற்சி, பத்திரிகைத்துறை, அபிவிருத்தி தொடர்பாடல், டிஜிட்டல் ஊடகம் மற்றும் புதிய ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகத் துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் இளம் ஊடகவியலாளர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகப் பணியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

