(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (2026 செப்டம்பர் 05) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் (03) ஒரு படகுடன் (01), அறுநூற்று எழுபத்தி மூன்று (673) கடல் அட்டைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை நிறுவனத்தினால், யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பிரதேசத்தை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று பரிசோதிக்கப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கரைக்குக் கடத்திச் செல்லப்பட்ட கடல் அட்டைத் தொகை இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 51 மற்றும் 56 வயதுக்கு இடைப்பட்ட மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், கடல் அட்டைத் தொகை, படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



