JobVibe.lk - Sri Lanka Job Portal

வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பினால் கவிமகள் விருதும் இலங்கை கிளையின் தேசியத் துணைச் செயலாளர்களில் ஒருவராகவும் புத்தளம் சுபியானி தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கொழும்பு: இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து பங்களிப்பாற்றி வரும் புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் முகம்மது பாரூக் பாத்திமா சுபியானிக்கு ‘வளரி கவிமகள்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் இலங்கை அமைப்பின் தேசியத் துணைச் செயலாளராகவும் அவர் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பும், இலங்கை வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த ‘வளரி கவிதை இதழ்’ 18ஆம் ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இதன்போது, வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் இலங்கை அமைப்பின் செயலாளர் கவிஞர் இந்திரா ஜெயபாரதி அவர்களால் கவிஞர் முகம்மது பாரூக் பாத்திமா சுபியானிக்கு ‘வளரி கவிமகள்’ விருதும் பொன்னாடையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இவ்விருது, இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென தனித்துவமான தடம் பதித்துள்ள அப்துல் ரசாக் மேமன் கவி ஐயா அவர்களின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் வழங்கப்பட்டது.

கவிதைகளைப் படைப்பதுடன் மட்டுமல்லாது, பல கவிஞர்களுக்கு கவிதையின் நுட்பங்களைக் கற்றுத்தரும் கவிதைக் குருவாகவும் அப்துல் ரசாக் மேமன் கவி ஐயா திகழ்ந்து வருகிறார். பல நூல்களைத் தொகுத்து இலக்கியப் பணிக்கு வளம் சேர்த்துள்ளதுடன், பல படைப்பாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றார். அவரது இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலேயே இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் இலங்கை அமைப்பின் புலனக் குழுவில் நாள்தோறும் இடம்பெறும் கவிதை நிகழ்வுகளில் கவிஞர் பாத்திமா சுபியானி தொடர்ந்து முழுமையான பங்களிப்பை வழங்கி வருவதும், தமிழ் மொழி மற்றும் கவிதை மீதான அவரது பற்றுறுதியும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டன.

தன்னை ‘வளரி கவிமகள்’ விருதுக்குத் தெரிவு செய்த அருணாசுந்தரராசன், ஆசிரியரும் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு, கவிஞர் இந்திரா ஜெயபாரதி உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகத்தினருக்கு கவிஞர் பாத்திமா சுபியானி தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தேசியத் துணைச் செயலாளராக நியமனம்

இதே நிகழ்வில், வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் இலங்கை அமைப்பின் தேசியத் துணைச் செயலாளராக கவிஞர் முகம்மது பாரூக் பாத்திமா சுபியானி ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இதற்கான நியமனச் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.

நியமனச் சான்றிதழை கலாபூஷணம் கே. பொன்னுத்துரை, இலக்கியக் குழுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், வழங்கினார்.

நிகழ்வில் நாகபூஷணி கருப்பையா, உதவிப் பணிப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தென்றல் பண்பலை, சிறப்புரையாற்றினார்.

மேலும், மூத்த பத்திரிகையாளர். ஆசிரியர் புதிய குரல் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அவர்களின் கையால் ‘பெண்களின் கவிதைக்களம்’ 18ஆம் ஆண்டு மலர் கவிஞர் பாத்திமா சுபியானிக்கு வழங்கப்பட்டது. ‘பெண்களின் குரல்... சமூகத்தின் மாற்றம்...’ என்ற கருப்பொருளில் வெளிவந்த இவ்வாண்டு மலர், வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் இலக்கியச் செயற்பாடுகளையும் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இலக்கியப் படைப்பாளர்களை ஊக்குவித்தல், கவிதைத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்தல் மற்றும் பெண் படைப்பாளர்களின் குரலை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் செயற்பட்டு வரும் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பில் கவிஞர் முகம்மது பாரூக் பாத்திமா சுபியானிக்கு கிடைத்துள்ள ‘வளரி கவிமகள்’ விருதும் தேசியத் துணைச் செயலாளர் பதவியும், அவரது இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இரட்டை அங்கீகாரமாக அமைந்துள்ளன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال