(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையின் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் 6 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் ‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ பாய்மரப் படகுப் போட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி பெறும் கடற்படை அதிகாரிகளின் பங்கேற்புடன் புதன்கிழமை (2026 ஆகஸ்ட் 19) திருகோணமலை டச்சு வளைகுடா கடற்கரையில் ஆரம்பமானது.
விளையாட்டுத்துறை மூலம் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கங்களாகும்.
கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் நலிந்த திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவின் தலைமையில் இப்போட்டித் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டித் தொடரில் இத்தாலி, இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, சீனா மற்றும் இலங்கை ஆகிய ஆறு (06) நாடுகளின் கடற்படை பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பயிற்சி பெறும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மேலும், இலங்கை பாய்மரப் படகுச் சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இப்போட்டித் தொடர், 'Cup Championship' மற்றும் 'Open Championship' ஆகிய பிரிவுகளின் கீழ் 2026 ஆகஸ்ட் 19 முதல் 22 வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்போட்டியை ஆண்டுதோறும் நடத்துவதன் மூலம், விளையாட்டு வாயிலாக வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதுடன், நாட்டின் நீர் விளையாட்டுக்களைப் பிரபலப்படுத்துவதையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதையும் கடற்படை எதிர்பார்க்கிறது.
மேலும், இந்நிகழ்ச்சி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் மற்றும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது.













