JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்: முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ஹக்கீம் குற்றச்சாட்டு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியர்களின் சீருடை தொடர்பாகத் தற்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சர்ச்சையானது, முஸ்லிம் சமூகத்தைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு விஷமத்தனமான முயற்சியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று (15) நடைபெற்ற "இளஞ்சிறகுகள்" சிறுவர் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமகால விடயம் குறித்து நான் எதுவும் பேசவில்லை என முகநூலில் விமர்சிக்கிறார்கள். ஏனென்றால், இவ்விடயத்தை முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். நான் முகநூலில் போய் சண்டைக்குப் போக முடியாது. அது பேச வேண்டிய இடத்தில் பேசி, அதற்கு முடிவு காண வேண்டும்.

ஆனால், இதில் புரியாத புதிராக இருக்கிற விடயம், மனோ கணேசன் சொன்னது போல், இன்றைக்கு முஸ்லிம் பெண்கள் தொழிலுக்குப் போவதென்பது மிகச்சொற்பமான சில தொழில்களுக்கு மட்டும் தான். 

அதில் ஒன்று ஆசிரியர் தொழில், அடுத்தது இந்தத் தாதியர் தொழில். அதற்கும் இப்போது அண்மைக்காலமாக கொஞ்சம் கூடுதலாகப் போகிறார்கள். நிறைய முஸ்லிம் பெண்கள் மருத்துவர்களாகவும் வந்து விட்டார்கள்.

இப்போது இப்பின்னணியில், எனக்குத்தெரிந்த சில பெண் மருத்துவர்களிடம் இந்த சர்ச்சை சம்பந்தமாகவும், 'இந்தக் காதைத்திறந்து வைக்க வேண்டும்' என்று சொல்கிறார்களே, இது என்ன விடயம்? என்றும் கேட்டேன்.

சேர், நாங்கள் ஹிஜாப் அணிந்து தான் பணியாற்றுகிறோம். இது சும்மா உப்புச்சப்பில்லாத விடயம். நாங்கள் காதை மூடிக்கொண்டே ஸ்டெதாஸ்கோப்பைப் போட்டு ஒழுங்காக நோயைக் கண்டறிகிறோமே. அதில் என்ன பிரச்சினை இருக்கிறது?' என்று ஒரு பெண் மருத்துவர் என்னிடம் சொல்கிறார்.

இப்படியான பின்னணியில், ஒரு சீருடையில் இப்படியான தேவையில்லாத, விஷமத்தனமான சர்ச்சையை ஏன் உருவாக்குகிறார்கள் என்பது எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது.

ஏனென்றால், ஏதோவொரு விடயத்திற்காக முஸ்லிம் சமூகத்தைக் கொஞ்சம் வம்புக்கு இழுக்க வேண்டும். இவ்விடயத்தில் நாங்களும் கூடக்கொஞ்சம் கவலைப்பட்டோம். சில விடயங்கள் நடந்த போது அதனுடைய பிரதிபலிப்பாக இருக்குமோ என்று நான் நினைத்தேன்.

கல்முனையில் நாய் சம்பந்தமான ஒரு விவகாரம் நடந்த போது, அங்கே மத்திய கிழக்கில் ஒரு தமிழ் சகோதரருக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக மிகவும் கவலைப்படுகிறோம். அந்த கொதிநிலையிலிருந்து கொண்டு, அதற்காக இதைச் செய்கிறார்களா? என்றும் ஒரு சிலர் கருத்து எழுதியிருக்கிறார்கள்.

அது எப்படி இருந்தாலும், இன்றைக்கு அரசாங்கத்திடம் இதற்கு நாங்கள் விமோசனம் கேட்கப்போனால், அது வேறு விபரீதத்தில் முடிந்து விடுமோ என்று கூட யோசிக்க வேண்டியிருக்கிறது. 

ஏனென்றால், அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளராக இருப்பவர், எங்களுடைய ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். அவரிடம் தான் நாங்கள் போய் இதையெல்லாம் கேட்க வேண்டும்.

எரிக்கப்படுவதற்கு காரணமாக அவர் இருந்ததால், இன்று கொஞ்சம் வேதனைப்பட்டு கவலைப்படுவார் என நினைக்கிறேன். அதற்கான பிராயச்சித்தமாகவாவது இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு, இதற்கொரு முடிவைக்காண வேண்டும்.

நான் இங்கே மேடையில் இதைப்பற்றிப்பேசுவது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், நண்பர் மனோ கணேசன் தொடங்கியதால் நான் இது சம்பந்தமான விடயங்களைச் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், சம்பந்தப்பட்ட இந்த அதிகாரி கல்முனை RDHS-ஆக (Regional Director of Health Services) இருந்த போதும் கல்முனை தெற்கு வைத்தியசாலை உட்பட முஸ்லிம்கள் நிறைந்திருக்கின்ற ஏனைய வைத்தியசாலைகளில் இதே விதமாக ஆடை அணிந்து வந்த தாதியர் சம்பந்தமாக அவர் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், கல்முனை வடக்கு வைத்தியசாலைக்குப் போனவுடனே மாத்திரம் இந்த உதிப்பு எப்படி வந்தது என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. 

எனவே, இவையெல்லாம் என்னைப்பொறுத்தமட்டில், தாதியருக்கு இன்றைக்கு நீங்கள் ' உங்களது காற்சட்டையைக் கழற்றி விட்டு வாருங்கள்' என்று சொன்னால், அவர்களை நிர்வாணப்படுத்துவதற்குச் சமம்! என்பது தான் சமுதாயத்தில் இருக்கின்ற உணர்வு.

எனவே, இப்படியான சித்து விளையாட்டுகளைச் செய்வதன் மூலம் தேவையில்லாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற நிலவரங்கள் குறித்துக் கவலைப்படுகின்ற அதேநேரம், இதற்கான தீர்வை அரசு விரைவாகத்தரும் என்ற நம்பிக்கையோடும், அது சம்பந்தமான அழுத்தங்கள் ஆரம்பித்து விட்டன, அதற்கான தீர்வுகள் வந்தாக வேண்டும்" எனக்குறிப்பிட்டார்.


(நிசப்தம்)



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال