(பர்வின் பாத்திமா - கல்பிட்டி.)
ஒரு மனிதனையும், அவனது மதத்தையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனது மதம், கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் மற்றும் அடையாளங்களுடன் பின்னிப்பிணைந்தே வாழ்கிறான். இதில் யாரும் விதிவிலக்கல்ல என்பதே நிதர்சனமான உண்மை.
அப்படி இருக்கையில், ஒவ்வொருவருக்கும் வைக்கப்படும் பெயர் முதல், அவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள், பேசும் மொழி மற்றும் கடைப்பிடிக்கும் சமய அடையாளங்கள் வரை பல்வேறு விடயங்கள் அவர்களது அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன.
உதாரணமாக, மூக்குத்தி அணிதல், நெற்றியில் குங்குமம் அல்லது பொட்டு அணிதல், கையில் சமய நூல் அல்லது காப்பு அணிதல், குறிப்பிட்ட சமய அடையாளங்களை அணிதல், தலையை மறைத்தல் போன்றவை ஒருவரின் மத அல்லது கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடியவையாகும்.
இவை ஆடை மற்றும் அணிகலன்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. நாம் பேசுகின்ற மொழி, பயன்படுத்துகின்ற சொற்கள், எமது பெயர்கள், நாம் கடைப்பிடிக்கும் பாரம்பரியங்கள், மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் வாழ்வியல் முறைகள் எனப் பல்வேறு விடயங்களும் எமது அடையாளத்தின் ஒரு பகுதியாகவே அமைகின்றன.
அதேவேளை, பணியிடத்தில் வழங்கப்படும் “சீருடை” என்பதன் அடிப்படை நோக்கத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சீருடை என்பது ஒருவரின் மத, இன அல்லது கலாச்சார அடையாளத்தை அழித்து அனைவரையும் ஒரே மாதிரியாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, ஒருவர் வகிக்கும் தொழில், பதவி மற்றும் பணிப் பொறுப்பை பிறரிடமிருந்து அடையாளப்படுத்துவதற்காகவே அது வழங்கப்படுகிறது.
உதாரணமாக, காவல்துறை அதிகாரியின் சீருடை அவர் காவல்துறை அதிகாரி என்பதை அடையாளப்படுத்துகிறது. தாதியரின் சீருடை அவர் தாதியர் என்பதை அடையாளப்படுத்துகிறது. அதேபோன்று, சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சீருடையும் அவர்களின் தொழில் மற்றும் பணிப் பொறுப்பை அடையாளப்படுத்துவதற்கானதே தவிர, அவர்களின் மத அல்லது கலாச்சார அடையாளத்தை அகற்றுவதற்கானதாக இருக்கக்கூடாது.
இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்கதாக, பொது நிர்வாக அமைச்சின் Public Administration Circular No. 13/2019(I) இல், மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் ஆடை அணியும் பெண் அரச ஊழியர்கள் தொடர்பாக ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட அலுவலக ஆடையுடன் கூடுதலாக, மத வழக்கத்திற்கேற்ப ஆடை அணிவதற்கான ஏற்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, அவ்வாறு அணியும் ஆடை காரணமாக ஊழியரின் முகத்தை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
எனவே, ஒரு முஸ்லிம் பெண் அரச ஊழியர் தனது பணிக்குரிய சீருடையை முறையாக அணிந்துகொண்டு, தனது மத அடையாளத்தைப் பேணும் வகையில் முகம் தெளிவாகத் தெரியும் ஹிஜாப் அணிவதை, சீருடையை நிராகரிப்பதாகவோ அல்லது தொழில் அடையாளத்தை மறைப்பதாகவோ மட்டும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு சட்டமும் சுற்றறிக்கைகளும் தெளிவாக இருக்கின்ற நிலையில், வீணான விதண்டாவாதங்களிலும், ஊழியருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவது தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்குவதோடு, திட்டமிட்ட சதியாகவும் பார்க்கப்படக்கூடிய சூழலை உருவாக்குகிறது.
மாறாக, தொழிலுக்குரிய சீருடையையும், மத அடையாளத்தைப் பேணுவதற்கான மேலதிக ஆடையையும் சட்டம் மற்றும் நடைமுறைக்கு உட்பட்டு இணைத்துப் பேணும் உரிமை மற்றும் ஏற்பாடுகள் குறித்து நியாயமான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும்.
அதேநேரம், எந்தவொரு பணியிடத்திலும் சுகாதாரம், பாதுகாப்பு, பணித்திறன் மற்றும் ஊழியரைத் தெளிவாக அடையாளம் காணுதல் போன்ற நிர்வாகத் தேவைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தை ஒரு மதத்திற்கும் இன்னொரு மதத்திற்கும் இடையிலான பிரச்சினையாகவோ, இனவாத அல்லது மதவாத கோணத்திலோ அணுகாமல், நடைமுறையில் உள்ள சுற்றறிக்கைகள், சட்ட விதிமுறைகள், தொழில்சார் தேவைகள் மற்றும் ஒவ்வொருவரினதும் மத–கலாச்சார உரிமைகள் ஆகிய அனைத்தையும் சமநிலையாகக் கருத்தில் கொண்டு அணுகுவதே சிறந்தது.
ஒருவரின் மத அடையாளத்தை மதிப்பது ஒருபோதும் மற்றொருவரின் உரிமையை மறுப்பதாகாது.
வேறுபாடுகளை அழிப்பது ஒற்றுமை அல்ல.
வேறுபாடுகளை மதித்து ஒன்றாக வாழ்வதே உண்மையான ஒற்றுமை.
சீருடை தொழிலை அடையாளப்படுத்தட்டும்; மத அடையாளங்களை அழிக்க வேண்டாம்.
இது எந்தவொரு தனிநபரையும் குறிவைத்து முன்வைக்கப்படும் கருத்தல்ல. மாறாக, மதம், கலாச்சாரம், தொழில் மற்றும் மனித உரிமைகள் ஆகிய அனைத்தையும் சமநிலையாக மதிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட பார்வையாகும்.
