(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
‘நேர்மையான கலாச்சாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (2026 ஜூலை 31) இலங்கை கடற்படையினரால் நாடு முழுவதிலும் உள்ள கடற்படை முகாம்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய வகையில் பரந்த அளவிலான டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
மேற்கு, தெற்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென்கிழக்குக் கடற்படை கட்டளைகளுக்குட்பட்ட முகாம்களின் வளாகங்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டங்களின் மூலம்; டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்தல், சுற்றாடலைத் தூய்மைப்படுத்தல் மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன் மூலம் சுகாதாரமான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்கு கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.
மேலும், இந்த டெங்கு ஒழிப்புத் திட்டங்களில் கடற்படை கட்டளைகளைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் பங்கேற்றதுடன், கொடிய டெங்கு அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகத் தீவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு கடற்படை வீரர்கள் தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.






