JobVibe.lk - Sri Lanka Job Portal

மார்க்கக் கல்வி, சமூகப் பணிகளில் கரிசனையுடன் செயற்பட்ட அஷ்ஷைக் ஹஜ்ஜு முஹம்மதின் மறைவு பேரிழப்பாகும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த கவலை.!

(அஸ்லம் எஸ். மௌலானா)

மார்க்கக் கல்வி, தஃவா மற்றும் சமூகப் பணிகளில் மிகுந்த கரிசனையுடன் செயலாற்றிய அஷ்ஷைக் ஹஜ்ஜு முஹம்மது அவர்களின் மறைவு எமது பிராந்தியத்திற்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

அஷ்-ஷைக் ஹஜ்ஜு முஹம்மது அவர்களின் மறைவு குறித்து அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷைக் ஏ.எல்.எம். ஹாஷிம், செயலாளர் அஷ்ஷைக் ஏ.எல். நாஸிர் கனி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

அஷ்-ஷைக் ஹஜ்ஜு முஹம்மது அவர்கள் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளராக இருந்து ஜம்மிய்யாவின் சிறப்பான பணிகளுக்கும் உலமாக்களின் நலன்களுக்காகவும் முன்னின்று உழைத்த ஆளுமைமிக்க ஓர் உலமாவாகத் திகழ்ந்துள்ளார்.

மேலும், தான் பிறந்த சம்மாந்துறைப் பிரதேசத்தில் மாத்திரமல்லாமல் பிராந்தியம் முழுவதும் மார்க்கக் கல்வி வளர்ச்சிக்காகவும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்காகவும் தலைசிறந்த உலமாக்களை உருவாக்குவதற்காகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றி வந்துள்ளார்.

இத்தகைய உன்னத பணியாற்றிய அஷ்ஷைக் ஹஜ்ஜு முஹம்மது அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மாணவர்கள், அபிமானிகள் அனைவருக்கும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனம் கிடைக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்- என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா மேலும் குறிப்பிட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال