(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை நீதியமைச்சின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்துடன் இணைந்து, பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் காலி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (09) காலியில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டபிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. தசுன் வீரசிங்க, வெலிவிட்டிய திவித்துர பிரதேச செயலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி டபிள்யூ பிரியதர்ஷனி, யக்கலமுல்ல பிரதேச செயலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யூ.ஜீ.எம். மதுவந்தி மற்றும் நாகொட பிரதேச செயலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜீ.எம் சுதர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் பணிப்பாளர் சபைத் தலைவி திருமதி மெலனி மானெல் உள்ளிட்ட மாவட்டக் குழுவின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலை பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. அ ன்டனி ஜேசுதாஸன், நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் திருமதி லவீனா ஹசந்தி மற்றும் காலி மாவட்ட இணைப்பாளர் செல்வி கே. ஹர்ஷணி ஆகியோர் வழிநடத்தினர்.
இதன்போது, திட்டத்தின் நோக்கங்கள், நடைமுறைப்படுத்தும் முறை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் பயனுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
காலி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு மேற்கொள்ளும் முக்கியமான புதிய முன்னெடுப்பாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.







