எம்.யூ.எம்.சனூன்
புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக நான்கு மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் மொழித் தின மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்ற புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வலய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இப்போட்டிகளில் நான்கு மாணவர்கள் முதலிடங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஒரே ஆண்டில் நான்கு மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிவுகளின்படி ஜி. தரண்யா மற்றும் ஏ.பி. தனுத்ரா ஆகியோர் இலக்கிய விமர்சனப் போட்டியில் முதலிடத்தையும், என்.துவரகா இலக்கணப் போட்டியில் முதலிடத்தையும், ஆர். தருசிகா திறனாய்வுப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் எம்.எஸ்.எப். சபா திறனாய்வுப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
தேசிய மட்டப் போட்டிகளிலும் மாணவர்கள் வெற்றியீட்டி பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
