எம்.யூ.எம்.சனூன்
பாடசாலை மட்டத்தில் தெரிவாகி, கோட்ட மட்டப் போட்டிகளில் கொடி கட்டிப் பறந்தும், வலய மட்டப் போட்டிகளில் தமது வல்லமையை வெளிப்படுத்தியும், தற்போது மாகாண மட்டப் போட்டிகளிலும் தங்களது திறமையை உறுதிப்படுத்திய புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டும் நோக்குடன் பயணிக்கும் இம்மாணவர்கள், சதுரங்கப் போட்டி, வொலிபோல், தமிழ் மொழித் தினப் போட்டிகள் மற்றும் ஆங்கிலச் செய்தி வாசிப்புப் போட்டி ஆகிய பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர்.
இவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவும், மேலும் பல வெற்றிகளை நோக்கி முன்னேறவும் ஊக்கமளிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உமர் பாரூக் மகா வித்தியாலய அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாதனை மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன், ஏனைய மாணவர்களும் ஊக்குவிக்கப்பட்டனர்.
மேலும், கல்விப் பணிமனையின் அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டியதுடன், எதிர்காலப் போட்டிகளிலும் வெற்றியீட்ட தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு மாணவர்களின் திறமைகளை மதிப்பளித்து கௌரவிப்பதோடு மட்டுமல்லாது, பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.


