”ஜிஹாத், முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களை கொன்றார்களா ? வரலாற்றுத் தொடர்......... 6 '
ஆரம்ப காலங்களில் தமிழ் போராட்ட இளைஞர்களுக்கு உதவுவதற்கு எவரும் முன்வராத நிலையில், இஸ்ரேலுடன் போரிட்டுக்கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நிலையிலும், பாலஸ்தீன், லெபனான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது.
பாலஸ்தீன இயக்கத்துடன் எவ்வாறு தொடர்பு கிடைத்தது ?
EROS இயக்கம் 1975 ல் லண்டனில் உருவானது. அதன் தலைவர்கள் லண்டனில் இருந்தபோது, அங்கு இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) பிரதிநிதி Syed Hameed உடன் தொடர்பு ஏற்படுத்தினர்.
பின்னர் அந்தத் தொடர்பின் மூலம் EROS இயக்க உறுப்பினர்களுக்கு லெபனானில் இராணுவப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது முதன்முதலில் இவ்வாறான பயிற்சியை EROS இயக்கம் பெற்றுக் கொண்டதென்று கூறலாம்.
1976 ல் EROS பிரதிநிதி ஒருவர் லெபனானின் தலைநகர் Beirut சென்ற பின்னர் Abu Jihad உடனான தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் EROS, LTTE ஆகிய இயக்கங்களுக்கிடையில் நெருங்கிய உறவு இருந்ததன் காரணமாக, EROS இயக்கத்தின் உதவியுடன் 1976 / 77 காலப்பகுதியில் லெபனானில் உள்ள PLO முகாம்களில் EROS உறுப்பினர்களுடன், LTTE உறுப்பினர்களும் பாலஸ்தீன போராளிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றனர் என்றும் இந்தியாவின் Jain Commission பதிவு செய்துள்ளது.
பாலஸ்தீன முகாம்களில் எவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட்டது ?
👉ஆயுதங்களை கையாளுதல்,
👉துப்பாக்கி சுடுதல்
👉குண்டுகள் தொடர்பான அடிப்படைப் பயிற்சி
👉கெரில்லா தாக்குதகள்,
👉பதுங்கித் தாக்குதல்
👉வேவுபார்த்தல்
👉கள ஒழுக்கம்
👉இராணுவ போர் தந்திரோபாயம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கமானது இஸ்ரேலுடனான போரில் நீண்டகால அனுபவம் பெற்றிருந்ததால், தமிழ் இளைஞர்களுக்கு அது ஒரு முக்கியமான வாய்ப்பாகவும், வரப்பிரசாதமாகவும் அமைந்தது.
அத்துடன், பாலஸ்தீனப் பயிற்சிகள் EROS, LTTE ஆகிய இயக்கங்களுக்கு மாத்திரமல்லாமல் EPRLF, TELO, PLOTE ஆகிய இயக்கங்களின் உறுப்பினர்களுக்கும் PLO முகாம்களில் பயிற்சி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.
இந்த பயிற்சிகள் ஒரே தடவையில் நடைபெறாமல் பல கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.
EPRLF இயக்கத்தின் தலைவர் கே. பத்மநாபா 1976 ல் லெபனானில் பயிற்சி பெற்றதுடன், டக்ளஸ் தேவானந்தா (முன்னாள் அமைச்சர்) 1978 ல் லெபனானில் பயிற்சி பெற்றார்.
அத்துடன், 1980 களின் ஆரம்பத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலமாக தமிழ் இயக்கங்களுக்கு சர்வதேச தொடர்புகள் கிடைத்ததாகவும், அந்த தொடர்புகள் மூலமாக ஆயுத கொள்வனவுகள் மற்றும் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவியதாகவும் கூறப்படுகின்றது.
லெபனான் அப்போது போர்க் களமாகவும், இஸ்ரேலிய பதட்டமான கள சூழ்நிலையும் இருந்தது. தமிழ் போராளிகள் முதன்முறையாக போர்க் களங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றது என்பதனை நேரடியாக பார்த்ததுடன், போர்க் கள அனுபவங்களையும் அங்கு பெற்றுக் கொண்டனர்.
தமிழ் இயக்கங்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட பயிற்சிகள் “ஏட்டுச் சுரக்காய்” போன்று இருந்தது. அதாவது அந்த பயிற்சிகள் கள அனுபவங்களை பெற்றுக் கொடுக்கவில்லை.
மேலும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உதவியுடன் LTTE மற்றும் இன்னும் சில இயக்கங்கள் லிபியாவுக்கு சென்று பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி பெற்ற தமிழ் இயக்க உறுப்பினர்களில் முஸ்லிம் இளைஞர்களும் அடங்கும்.
ஆரம்ப வரலாறுகள் இவ்வாறு இருக்கும்போது, தாங்கள் LTTE ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்கின்ற சில இந்தியர்கள், தற்போது பாலஸ்தீன குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவதனை முகநூல்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது கவலையாக உள்ளது.
தொடரும்..........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
