எம்.யூ.எம். சனூன்
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆனமடு மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் சனிக்கிழமை (08) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இளம் விளையாட்டுத் திறமையாளர்களை தேசிய மற்றும் சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஆனமடு மத்திய கல்லூரியானது இப்பகுதியில் ஒரு விளையாட்டு திறமை மிக்க பாடசாலையாக செயல்படுகிறது. இதன் விளையாட்டு மைதானத்தை நவீனமயமாக்குவதும், மேம்படுத்துவதும் பாடசாலையின் விளையாட்டுத் திறமைகளையும், அப்பகுதி மாணவர்களின் திறமைகளையும் வளர்ப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்கும்.
இப்பகுதி மாணவர்கள் பயிற்சி பெறவும், தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இதன் மூலம், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் அருண பண்டார, வடமேல் மாகாண முதலமைச்சர் அமைச்சகத்தின் செயலாளர் வன்னினாயக்க, புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக சில்வ, ஆனமடு பிரதேச சபையின் தலைவர் அலோக பண்டார, ஆனுமடு மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலையின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.




