(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
14 ஆவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் தொடக்க விழா, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (2026 ஆகஸ்ட் 14) வெலிசர Wave n’ Lake கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இம்முறை விளையாட்டு விழா, பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுச் சபையின் தற்போதைய தலைவரும் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தொடக்க விழாவின் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு (04) முன்னணி விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். அத்துடன், விளையாட்டுத் துறைக்கு அவர்கள் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுக் சின்னங்கள் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளுக்கிடையில் விளையாட்டுத்திறன், நல்லுறவு மற்றும் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்குப் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா ஒரு தனித்துவமான பங்களிப்பை வழங்குகிறது என வலியுறுத்தினார். அனைத்து நிலைகளிலும் விளையாட்டை மேம்படுத்துவதற்காக முப்படையினரும் அளிக்கும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதி அமைச்சர், நேர்மையுடனும் குழு உணர்வுடனும் போட்டிகளில் பங்கேற்று, விளையாட்டு மைதானத்திலும் அதற்கு வெளியிலும் சிறந்து விளங்க பாடுபடுமாறு விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.
மேலும், இம்முறை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவில் 39 விளையாட்டு நிகழ்வுகளின் கீழ் 4,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தாயகத்திற்கு விளையாட்டு வெற்றிகளைப் பெற்றுத் தருவதில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதற்கமைய, 2026/2027 பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் ஊடாக முப்படையினரில் திறமைமிக்க பல புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உட்பட முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.











