எம்.யூ.எம்.சனூன்
இலங்கை கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவகத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் திறந்த பாடசாலை செயற்திட்டத்தின் புத்தளம் பிரதேச கற்கை நிலையங்களுள் ஒன்றாக புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு காஸிமிய்யாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரச பாடசாலை பாடத்திட்டத்தின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை கண்காணித்து மதிப்பீடு புதன்கிழமை (01) தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிநிதிகள் கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர் கல்வி மற்றும் மாற்றுக் கல்விப் பீடத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஏ.டீ.ஏ.சில்வா, கொரியாவின் யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் நாயகம் திருமதி ஹ்யூன்சூக், கொரியாவின் யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்ட நிபுணர் திருமதி இன்ஹ்யே, துணைத் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.துனைசிங், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஜீ.முனசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.எம்.எஸ்.ஐ.விஜேபண்டார,
சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், திறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டம் எம்.எச்.எம்.நவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி உஸ்தாத்மார்கள், பாடசாலை பாட ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் எச்.எம். மின்ஹாஜ் இஸ்லாஹி தலைமை தாங்கினார்.
வருகை தந்த அதிகாரிகள் கல்லூரியின் வகுப்பறைகளைப் பார்வையிட்டதுடன், அரச பாடத்திட்டம் தொடர்பான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள், கல்வி நிர்வாகம் மற்றும் கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.
இதன்போது, கல்லூரியில் நீண்டகாலமாக அரச பாடத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைப் பாராட்டி, தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மேலும், இச்செயற்றிட்டத்தின் கீழ் புத்தளம் பிரதேச கற்கை நிலையமாக கல்லூரி தொடர்ந்து செயற்படுவதற்கான பூரண அங்கீகாரத்தை வழங்கியதோடு, அரச பாடசாலை பாடத்திட்டத்தை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தேசிய கல்வி நிறுவகம் வழங்கும் என்றும் உறுதியளித்தனர்.
நிகழ்வின் நிறைவில், வருகை தந்த அதிகாரிகள் கல்லூரியின் விருந்தினர் பதிவுப் புத்தகத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களின் வருகையை நினைவுகூரும் வகையில் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் நினைவு முத்திரை பொறிக்கப்பட்ட கல்லூரியின் முதல் நாள் உரை நினைவுப் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தேசிய கல்வி நிறுவகத்தின் இவ் அங்கீகாரம், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் கல்விச் சேவைக்கும், தரமான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் கிடைத்துள்ள மேலும் ஒரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.











