(எம். என். எம்.அப்ராஸ்)
ஜனாதிபதியினால் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளரான எம். கே.சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், எம்.பி.ரோஹண புஷ்பகுமார மற்றும் முன்னாள் அளவையாளர் நாயகமான கே. தவலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், கிழக்கு மாகாண தொல்லியல் மரபுகளைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி முபிஸால் அபூபக்கர்,தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது நிர்வாக எல்லைகளை வரையறுக்கும் ஒரு தொழில்நுட்ப அமைப்பு மட்டுமல்ல; மாறாக,நாட்டின் தேர்தல் பிரதிநிதித்துவம், அரசியல் சமநிலை மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கியமான சுயாதீன நிறுவனமாகும் என்றார்.
இலங்கை போன்ற பன்முக சமூக அமைப்பைக் கொண்ட நாட்டில், இவ்வாறான தேசிய நிறுவனங்களில் அனைத்து சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவது நல்லாட்சியின் அடிப்படைக் கோட்பாடாகும்.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் இம்முறை ஆணைக்குழுவில் இடம்பெறாதமை, அந்த சமூகத்தின் மத்தியில் கவலையையும் பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்,தற்போதைய அரசின் அமைச்சரவையிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தொடர்கின்றது. அதேபோன்று பல்வேறு தேசிய நிறுவனங்கள் மற்றும் முக்கிய நியமனங்களிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்து காணப்படுவது,அந்தச் சமூகத்தின் மத்தியில் தங்களுக்கான இடம் மற்றும் பங்களிப்பு குறித்து சந்தேக உணர்வை உருவாக்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் மூன்று பிரதான சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை,அந்த அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்திய ஒரு சிறந்த நடைமுறையாகும்.
குறிப்பாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் எல்லை நிர்ணயத் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது, அங்குள்ள மக்களின் வரலாற்றுப் பின்னணி, மக்கள்தொகைப் பரவல், நிர்வாகத் தேவைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய அனைத்தும் சமநிலையுடன் கருத்தில் கொள்ளப்படுவது அவசியமாகும்.
எனவே, எதிர்காலத்தில் தேசிய ஆணைக்குழுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் உயர்மட்ட நியமனங்கள் மேற்கொள்ளப்படும் போது, தகுதிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு,நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறான அணுகுமுறையே அனைத்துச் சமூகங்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, தேசிய ஒற்றுமையையும் நல்லாட்சியையும் மேலும் உறுதிப்படுத்தும் என்று கலாநிதி முபிஸால் அபூபக்கர் வலியுறுத்தினார்.
