எம்.யூ.எம்.சனூன்
நாட்டில் அதிவேகமாகப் பரவிவரும் ஆட்கொல்லி டெங்கு நுளம்பின் தாக்கத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் டெங்கு ஒழிப்புச் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று நீர் தேங்கும் இடங்களைப் பரிசோதித்து, தண்டப்பணங்களும் விதிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் புத்தளம் 617/ஏ முள்ளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து மஸ்ஜிதுகளின் பிரிவுகளிலும் சனிக்கிழமை (18) காலை பாரியளவிலான டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புத்தளம் பிரதேச செயலகம், புத்தளம் மாநகர சபை மற்றும் குறித்த கிராம சேவையாளர் பிரிவின் பிரஜா சக்தி அமைப்பு ஆகியன இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
சனிக்கிழமை காலை முள்ளிபுரம் அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் ஒன்று கூடிய குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளர் ஆர். சல்பீர் உள்ளிட்ட பிரஜா சக்தி குழுவினர், இளைஞர்கள், நலன் விரும்பிகள், சமூகவியலாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த பாரிய அளவிலான டெங்கு ஒழிப்பு பணியிலே இணைந்து கொண்டார்கள்.
புத்தளம் முள்ளிபுரம் பாடசாலை வளாகம், முள்ளிபுரம், கூபா நகர், அல் அமீன் புரம், கடற்கரை வீதி போன்ற பிரதேசங்களில் இதன் போது டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இனங்கானப்பட்டு அழித்து ஒழிக்கப்பட்டன.
குறிப்பாக டெங்கு நுளம்பு பெருகும் வகையில் ஆங்காங்கே குவிந்து காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் வெற்று ரின்கள் என்பன தொண்டர்களால் சம்பூர்ணமாக அகற்றப்பட்டன.














