JobVibe.lk - Sri Lanka Job Portal

அச்சுறுத்தும் டெங்கு பேரபாயமும் சமூகப்பொறுப்பும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் “டெங்கற்ற கிழக்கு” முன்மாதிரியான முன்னெடுப்பு

விருட்ச வேந்தன்

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிகத்தீவிரமானதொரு சுகாதாரப்பேரபாயமாக மாறியுள்ள இக்கட்டான காலகட்டத்தில், மக்களின் உயிரைப்பாதுகாக்கும் நோக்கோடு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி" எனும் விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச்செயற்றிட்டம் காலத்தின் மிகச்சிறந்ததும் வரவேற்கத்தக்கதுமான நகர்வாகும். 

கல்முனையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இம்மக்கள் நலச்செயற்றிட்டம் நெருக்கடி நிலைகளில் ஒரு அரசியல் கட்சி எவ்வாறு சமூகப்பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்பதற்கான சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

தேசிய மட்டத்தில் தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்

இச்செயற்றிட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமையைக் கருத்திற்கொள்வது அவசியமாகும். தேசிய டெங்கொழிப்புப்பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, டெங்கு நோயின் தாக்கம் முன்னெப்போதுமில்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. 

மொத்த நோயாளர்கள்:

இவ்வருடம் (ஜூலை 16 வரை) நாடு முழுவதும் 73,455 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள்: 

டெங்கு காய்ச்சலால் இதுவரை 50 மரணங்கள் சம்பவித்துள்ளன.


சமீபத்திய தீவிரம்:

ஜூலை மாதத்தின் முதல் 16 நாட்களில் மாத்திரம் 18,076 நோயாளர்களும் ஜூலை 16ம் திகதி ஒரே நாளில் 1,025 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 

(ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 21,538 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்).


அதிகூடிய பாதிப்பு:

மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 38,700 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் (கம்பஹாவில் 15,341 கொழும்பில் 14,625).

காலத்தின் தேவையறிந்த துரித நடவடிக்கையும் தலைமைத்துவமும்

மேல் மாகாணத்தில் டெங்குவின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஏனைய மாகாணங்களுக்கு அது தீவிரமாகப்பரவுவதைத் தடுக்கும் வகையிலான தடுப்பு நடவடிக்கைகள் அவசரத்தேவையாகும். 

இந்த யதார்த்தத்தைப்புரிந்து கொண்டு கிழக்கு மாகாணத்தைப்பாதுகாக்கும் நோக்கில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மேற்கொண்டுள்ள துரித செயற்பாடு நெஞ்சாரப்பாராட்டத்தக்கது.

பாராளுமன்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்களை வெறும் கொள்கையளவிலோ அல்லது அறிக்கைகளாகவோ சுருக்கி விடாமல், அவற்றை உடனடியாகக் கிராம மட்டத்திற்கு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கும் அவரது செயற்றிறனும் தூரநோக்கும் ஒரு ஆளுமைமிக்க தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகும். 

உள்ளூராட்சி மன்றத்தலைவர்கள், உறுப்பினர்கள் தொடக்கம் கீழ்மட்டச்செயற்பாட்டாளர்கள் வரை அனைவரையும் ஓரணியில் திரட்டி, இச்செயற்றிட்டத்தை மாவட்ட ரீதியாக விரிவுபடுத்த அவர் காட்டும் அதீத ஆர்வம் மக்களின் நலன் மீதான அவரது அக்கறையை உறுதிப்படுத்துகிறது.

விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையும் சமூகப்பொறுப்பும்

டெங்கொழிப்பு என்பது வெறுமனே அரசாங்கத்தின் அல்லது சுகாதாரத்துறையினரின் பொறுப்பு மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டுப்பொறுப்பாகும். 

அரசியல் அதிகாரத்தையும் சமூக வலைப்பின்னலையும் ஒன்றிணைத்து இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அதன் வீச்சு பல மடங்கு அதிகமாகும்.

ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 09, 2026 வரை முன்னெடுக்கப்படும் ஒரு மாத கால தீவிரச்செயற்றிட்டம், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்களின் தொழிநுட்ப ஆலோசனைகளையும் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு, முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்படுகின்றமை இதன் வெற்றிக்கு வலுவான அடித்தளமாகும்.

அரசியல் தளத்திலிருந்து சமூகப்பணிக்கான ஒரு முன்னுதாரணம்

ஒரு சமூக ஆய்வாளரின் பார்வையில் இது வெறுமனே ஒரு விழிப்புணர்வுத்திட்டம் மட்டுமல்ல, மாறாக, இதுவொரு முன்மாதிரியான அரசியல் அணுகுமுறையாகும். 

பொதுவாக அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களை நாடிச்செல்வதும் வாக்குச் சேகரிப்பில் முழு மூச்சாக ஈடுபடுவதும் நமது நாட்டு அரசியலில் வழமையான காட்சியாகும்.

ஆனால், அத்தகைய பாரம்பரிய அரசியல் வட்டத்தை விட்டு வெளியேறி, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் அமைப்பாளர்கள் என கட்சியின் முழுமையான கட்டமைப்பையும் ஒரு சமூகப்பணிக்காகப் பயன்படுத்துவது ஒரு அரசியல் இயக்கம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் வழங்கும் மிக உயர்ந்த சேவையாகும்.

"டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி" என்ற இச்செயற்றிட்டம் கிழக்கு மாகாண மக்களின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். 

73,000 க்கும் மேற்பட்ட நோயாளர்களும் 50 மரணங்களும் பதிவாகியுள்ள இந்நெருக்கடியான சூழலில், மக்களின் உயிர்களைப்பாதுகாக்கும் இந்த உன்னதப்பணியில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காட்டியுள்ள ஈடுபாடும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலும் பிராந்திய நிர்வாக மற்றும் அரசியல் வரலாற்றில் முன்மாதிரியான அத்தியாயமாக நிலைத்து நிற்கும். 

ஏனைய அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் இதனைப்பின்பற்றி நாட்டை டெங்கு அபாயத்திலிருந்து மீட்டெடுக்க முன்வர வேண்டும்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال