எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலயம், வடமேல் மாகாணத்திலிருந்து தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் அகில இலங்கை ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாடசாலை என்ற சாதனையை பதிவு செய்துள்ளது.
புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) மாலை நடைபெற்ற மாகாண மட்டத்திலான இறுதிப்போட்டியில் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்தை எதிர்த்து போட்டியிட்டு 03 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த மாகாண மட்டத்திலான வெற்றியுடன் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலய அணியானது 2023, 2024, 2025, 2026 ஆகிய நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தகுதியடைந்த ஒரு பாடசாலையாக சாதனையை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்காக பாடசாலை அணிக்கு தலைமைத்துவம் வழங்கிய கல்லூரியின் முதல்வர் ஏ.ஜே.எம். இல்ஹாம், அணியை நெறிப்படுத்திய பிரதி அதிபர் ஏ.ஜே.எம். இனூஸ், விளையாட்டு பொறுப்பாசிரியர் என்.எம். ஜெசீம், பயிற்றுவிப்பாளர் எச்.என்.அம்லக் மொஹமட், ஊக்கமளித்த ஆசிரியர் குலாம், பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை முகாமைத்துவ குழுவினர் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அகில இலங்கை ரீதியான போட்டிகளிலும் வெற்றி பெற்று புத்தளம் மண்ணுக்கும், மாவட்டத்துக்கும், மாகாணத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.




