JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி வரலாற்றில் முதலாவது புதுக் கவிதை நூல் "பனை வீரன்" வெளியீடு

கற்பிட்டி தியாகராஜா மகேந்திர பாஸ்கர் எழுதிய புதுக் கவிதை நூலான பனை வீரன் கற்பிட்டி வரலாற்றில் வெளிவரும் முதலாவது புதுக் கவிதை நூலாகும். 

கலை இலக்கியத்துறையில் கற்பிட்டிக்கென ஒரு சிறப்பிடம் உண்டு குறிப்பாக அப்துல் மஜீத் புலவர், தெள்ளப்பா புலவர் போன்றவர்களின் பங்களிப்புகளுடன் லியாவுல் பனான் கலைச் சுடர் எஸ்.ஐ எம்.ஏ ஜப்பாரின் காலப் பகுதியின் பின்னர் கற்பிட்டியின் கலை இலக்கிய துறையில் நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தியாகராஜா மகேந்திர பாஸ்கர் எழுதிய பனை வீரன் தனிநபர் கவிதை நூல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24/07/2026) வெளிவருவது ஒரு இமாலய சாதனையே அத்தோடு இக் கவிதை நூலை வெளியிடுவதிலும் கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகக் குழுவும் பெருமிதம் அடைகின்றது.

கலை இலக்கியங்கள் என்பவை ஒரு சமூகத்தின் வரலாற்று பக்கங்களின் முக்கிய அங்கமாகும். இலக்கியங்கள் வாழ்வியலின் அடையாளங்களை எச்சங்களுடன் கைமாற்றும் வல்லமை பெற்றவை. அத்தகைய இலக்கியங்களை தொலைத்து விட்ட சமூகங்களின் தொன்மையும் இருப்பும், எழுச்சியும் கானல் நீராகி, நாளயை இருப்புக்கான இலக்குகளையும், நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் இழந்து விடுகின்றன. இதனால் சமூகமொன்றின் கலை, கலாசார, பண்பாட்டு வாழ்வியல் விழுமியங்கள் தெலைகின்றன. அது மட்டுமன்றி, ஆன்மீக, பொருளாதார, அரசியல், கல்வி, அபிவிருந்தி முன்னெடுப்புகள் போன்றன வலுவிழந்து பயனின்றி விடுகின்றன.

இத்தகைய பின்னணியில் கற்பிட்டி வரலாற்றில் கவிதைத் தொகுப்பொன்று நூலுரு பெறுவதென்பது இமாலய சாதனையாகவே நோக்கப்பட வேண்டும். பாலைவன நிழலாய் தியாகராஜா மகேந்திர பாஸ்கரின் கவிதைக் தொகுப்புகள் பனை வீரனாய் தனித்தெழுந்து நின்று சாதனையுடன் தாங்கள் கரம் தவழ்கின்றன. அதுவும் வீரியமிக்க விடியலை நோக்கிய எழுச்சிக் கவிதைகளாகவும், சமகால வாழ்வியலை ஒளிவு மறைவின்றி எதிர்காலக்கிற்கு ஒப்புவிக்கின்ற வரலாற்று ஆவணமாகவும் இக்கவிதைகள் திகழ்கின்றமை விஷேட அம்சமாகும்.

தம் சகபாடியின் கவித் திறமைகளை இனங்கண்டு சாதனையாக்கி வரலாற்றில் தடம் பதிக்கச் செய்த ஒப்பற்ற நண்பர்களின் குழாம் கிடைக்கப் பெற்ற தியாகராஜா மகேந்திர பாஸ்கர் உண்மையில் அதிஷ்டசாலியே.

இத்தகைய நட்பு வட்டம் அமையப் பெறுவது அருட்கொடையே அவரின் கலைப்பயணம் தொடரவும், சாதனைகள் பல நிலைபெற வேண்டும் எனவும் அதற்கு பக்கபலமாக இருக்கும் கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் நிர்வாகத்தினரையும் வாழ்த்துகின்றோம்..

அதன் அடிப்படையில் கற்பிட்டி நகரில் இலைமறை காயாய் இருந்து கவி படைத்து வரும் கவிஞர் தியாகராஜா மகேந்திர பாஸ்கரின் முதல் கவிதை தொகுப்பை கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் வெளியிடுவதிலும் பெருமை கொள்கின்றது.

மகேந்திர பாஸ்கரின் எழுத்தாற்றலை இனங்கண்டு இவரின் கவி வரிகளுக்கு நூல் உருவம் கொடுக்க வேண்டும் என்ற நன்நோக்கோடு இது வரை காலமும் கற்பிட்டி நகரில் இருந்து புதுக் கவிதைகளின் நூல் ஒன்று வெளிவராத குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவும் கற்பிட்டியின் மகேந்திர பாஸ்கர் எழுதிய தனிநபர் கவிதைகளின் தொகுப்பாகவும், முதல் பிரசவமாகவும் வெளிவந்துள்ள பனை வீரன் கவிதை நூலை வெளியிடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து இன்று அதனை வெளியீட்டு வைக்க கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷனின் நிர்வாகத்தினர் வரலாறு படைத்துள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) இடம்பெறும் கவிதை நூல் வெளியீட்டு விழா கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷனின் தலைவரும் ஓய்வு பெற்ற முன்னாள் நுரைச்சோலை பாடசாலையின் அதிபருமான எம் ஏ.சீ.ஏ முத்தலிப் தலைமையில் பிற்பகல் 03 மணிக்கு கற்பிட்டி அக்ஷரா வரவேற்பு மண்டபத்தில் கவிஞரும் புத்தளம் ஐ. மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் பணிப்பாளருமான எஸ்.ஏ.சீ.பீ மரைக்காரின் திறனாய்வில் இடம்பெறுகின்றது  

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற முன்னாள் புத்தளம் வலய கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.டி.எம் பைரூஸமான் கலந்து கொள்வதுடன் விஷேட விருந்தினராக ஓய்வு பெற்ற முன்னாள் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல் நூஹூ லெப்பை கலந்து சிறப்பிக்க உள்ளார்.

அத்தோடு, கௌரவ அதிதிகளாக ஓய்வு நிலை அதிபர்களான கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கடமையாற்றிய எம்.பீ.எம் றோஸ் புஹாரி, மௌலவி எம்.ஏ.சீ இப்றாஹீம், எஸ்.எம் ஹூசைன்தீன், எஸ்.எம் ஆப்தீன், கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் யகடமையாற்றிய எக்ஸ். ரெஜீனா. எஸ்.டி.எம் சுஹைப், கற்பிட்டி அல் - ஹிரா ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றிய எஸ். எம். ஐயூப், எம்.ஐ.எம் அஷரபு அலி, கற்பிட்டி முகத்துவாரம் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றிய எம்.ஐ.எம். ஹரமைன், எஸ்.ஐ.எம். ஆஸ்தீன் குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஏ.எச்.எம் கலாம், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் கடமையாற்றிய எம்.ஐ.எஸ் நிஹாரா. நாவக்காடு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கடமையாற்றிய எஸ்.எம் நியூட்டன், கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய டப்ளியூ.பீ சஹீலா, ஓய்வு நிலை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.என்.எம்.எம். பஹ்ரி, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஓய்வு நிலை நிர்வாக கிராம உத்தியோகத்தர் பீ.எம்.எம் பைனஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

கற்பிட்டி தியாகராஜா மகேந்திர பாஸ்கர் எழுதிய முதலாவது கவி பிரசவமாக வெளியிடப்படும் பனை வீரன் கவிதை நூல் கற்பிட்டி வரலாற்றில் ஒரு மைற்கல்லாகும்

இவ் வெளியீட்டு விழாவிற்கான ஊடக அனுசரணையினை மதுரங்குளி மீடியா, தமிழன், விடிவெள்ளி பத்திரிகைகள் உதயம், கருப்பு வெள்ளை மின்னிதழ்கள் வழங்குகின்றமை விஷேட அம்சமாகும் 

இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு சகலரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழு சார்பாக நஷ்ர் பவுண்டேஷன் அன்பாய் அழைக்கின்றது.

தொகுப்பு 

எம். எச் எம் சியாஜ் 

சிரேஷ்ட ஊடகவியலாளர் 

கற்பிட்டி










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال