எம்.யூ.எம்.சனூன்
மதுரங்குளி மூக்குதொடுவா பிரதேசத்தில் போதை ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (19) மூக்குதொடுவா சனசமூக பொது மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்பிட்டி பிரதேச சபையின் மூக்குதொடுவா வட்டார உறுப்பினர் கெலும் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் கலந்து சிறப்பித்தார்.
மூக்குதொடுவா பகுதியில் இளைஞர்கள் மத்தியில் போதை பாவனை அதிகரிப்பு, பாடசாலை அருகில் போதைப்போருள் விற்பனை நடப்பதாக வரும் புகார்கள், குடும்பங்கள் சிதறுதல் மற்றும் திருட்டுக்கள் அதிகரிப்பு போன்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மூக்குதெடுவா பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற வலயமாக பிரகடனப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரும் காலங்களிலும் போதை ஒழிப்பு சம்பந்தமான விரிவான கலந்துரையாடலை நடாத்தவும், போதைப்பொருட்களுக்கு எதிரான ஊர் தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகியன நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மத தலைவர்கள், ஊர் மக்கள், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸ் மற்றும் பாலாவி பிரஜா சக்தி சமூக மேம்பாட்டு சபையின் உறுப்பினர் தம்ஜுன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



