JobVibe.lk - Sri Lanka Job Portal

டெங்கற்ற கிழக்கு : முஸ்லிம் காங்கிரஸ் இளைஞரணியின் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் தேசிய நோக்கோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள “டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளிலான கிழக்கு மாகாண டெங்கொழிப்புச்செயற்றிட்டம் இன்று (26) சம்மாந்துறையில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

சமூக அக்கறையுடன் முன்னெடுக்கப்பட்ட இம்மாபெரும் நிகழ்வானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் தலைமையில், சம்மாந்துறை தைக்காப்பள்ளிவாசல் அருகில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. 

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், டெங்கொழிப்பு என்பது அரசாங்கத்தின் மாத்திரம் பொறுப்பல்ல. அது ஒவ்வொரு பிரஜையினதும் தலையாய சமூகப்பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தினார். 

பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே டெங்கில்லாத ஆரோக்கியமான சமூகத்தை வெற்றிகரமாக உருவாக்க முடியுமென அவர் இதன் போது நம்பிக்கை வெளியிட்டார்.

காலை வேளையில் ஆரம்பமான இத்திட்டத்தில், டெங்கு பரவலைத்முற்றாகத்தடுக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

குறிப்பாக, சுற்றுச்சூழல் சுத்திகரிப்புப்பணிகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் மற்றும் நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளங் கண்டு அழிக்கும் செயற்பாடுகள் என்பன துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டு தமது பங்களிப்பை நல்கினர். 

சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இத்தகைய டெங்கொழிப்பு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள் கிழக்கு மாகாணம் முழுவதிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.


(விருட்ச வேந்தன்)











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال