(நிசப்தம்)
ஒரு நாட்டின் சிறுபான்மைச்சமூகம் தனக்கான அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பையும் வென்றெடுப்பதற்கு பலமான, ஒன்றுபட்ட அரசியல் பிரதிநிதித்துவம் இன்றியமையாததாகும்.
அந்த வகையில், இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அடையாளத்தை நிலைநிறுத்துவதில் "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" (SLMC) பேரியக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை ஆற்றி வருகின்றது.
எனினும், சமகால அரசியல் பரப்பில் சுயநல நோக்கங்களுக்காகவும் தற்காலிக அதிகாரக் கதிரைகளுக்காகவும் ஆங்காங்கே தோன்றி வரும் புதிய அரசியல் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளைப் பல கூறுகளாகப்பிரித்து வருகின்றன.
இத்தகைய வாக்குச்சிதறல் ஒட்டுமொத்த சமூகத்தையும் அரசியல் ரீதியாக அநாதையாக்கும் பேராபத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கடந்த கால படிப்பினைகளை உணர்ந்து, தகுதியானதொரு மூத்த தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய கடந்த கால சவால்களை உற்றுநோக்கும் போது, முஸ்லிம் தலைமைகளும் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுத்த தருணங்களில் தான் காத்திரமான வெற்றிகள் சாத்தியமாகியுள்ளன.
பேரினவாத சக்திகளினால் முஸ்லிம் சமூகத்தின் மத, கலாசார விழுமியங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட போதும், அநியாயமான முறையில் சமூக உரிமைகள் பறிக்கப்பட்ட போதும், சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் தமக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரே அணியாக நின்ற வரலாறு நமக்குண்டு.
கடந்த காலங்களில் பிரதான தேசியக்கட்சிகளுடன் கொள்கை ரீதியாகப்பேரம் பேசி, சமூகத்திற்கான அமைச்சுப்பதவிகளையும் அபிவிருத்திகளையும் கல்வி, பொருளாதார உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதற்கு மூல காரணமாக இருந்தது முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் ஒரே பலமாகப் பிரயோகிக்கப்பட்டமையே ஆகும்.
தற்போதைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையானது மிக வேகமாக மாறி வருகிறது. தேசிய அரசியல் கட்சிகள் புதிய வடிவங்களில் உருவெடுத்து வரும் இவ்வேளையில், முஸ்லிம் அரசியல் மட்டும் பலவீனமடைந்து வருவது கவலைக்குரியதாகும்.
"அதிக அரசியல் அதிகாரம்" என்ற மாயையை முன்வைத்து, கொள்கையற்ற ரீதியில் ஆளுக்கொரு தனிக்கட்சியை ஆரம்பிக்கும் கலாசாரம் இன்று முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்துள்ளது. இது சமூக நலனுக்கானதல்ல. மாறாக, தனிநபர்களின் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்கானதே.
மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் முஸ்லிம் வாக்குகள் இவ்வாறு பல கூறுகளாகப் பிரிக்கப்படும் போது, பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடையும். கடந்த காலங்களில் எம்மால் பெற முடிந்த அரசியல் அதிகாரங்கள் மற்றும் பேரம் பேசும் தகைமை இதனால் முற்றாகக்கைநழுவிப் போகும் நிலையேற்பட்டுள்ளது. நாம் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டு பிரிந்து நிற்பது, எதிர்கால முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும்.
இலங்கை முஸ்லிம் அரசியலில் தற்போதைய சூழலில் மதிக்கப்பட வேண்டிய மற்றும் இணைந்து பயணிக்க வேண்டிய மிக முக்கியமான ஆளுமையாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக பாராளுமன்ற அனுபவத்தைக்கொண்ட ஒரு மூத்த, முதிர்ச்சியடைந்த அரசியல்வாதியாக அவர் விளங்குகிறார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சரளமாக உரையாற்றக்கூடிய ஆற்றல் அவரிடமுள்ளதால், பேரினவாத அரசியல் சூழலில் முஸ்லிம்களின் தரப்பு நியாயங்களை பெரும்பான்மை சமூகத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் புரிய வைக்கக்கூடிய மிகச்சிறந்த தொடர்பாடல் ஆளுமை அவரிடமுள்ளது.
மேலும், ரவூப் ஹக்கீம் தேசிய ரீதியில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் நன்கறியப்பட்ட தலைவர். இலங்கையின் அரசியல் போக்குகள், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக வெளிநாட்டுத்தூதுவர்களும் சர்வதேச இராஜதந்திரிகளும் அடிக்கடி அவரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதை நாம் காண்கிறோம்.
இத்தகைய சர்வதேசப்பின்னணி கொண்ட ஒரு தலைமைத்துவத்தை நாம் பலவீனப்படுத்துவது சமூகத்திற்கு நாமே செய்து கொள்ளும் துரோகமாகும்.
தற்போதைய அரசியல் சூழலில் ஆளுங்கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்த போதிலும், இன்று வரை அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உரிய இடங்கொடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இத்தகைய சூழலில் பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் போன்ற மூத்த தலைவர்கள் முஸ்லிம்களின் உரிமை விவகாரங்களுக்காகவும் சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களுக்காகவும் குரல் கொடுக்கும் போது, ஆளுங்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்குப்பாதகமான எதிர்வினையாற்றுவது வேதனைக்குரியது.
"கடந்த ஆட்சியில் நீங்கள் ஆளுங்கட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?" என ரவூப் ஹக்கீம் போன்ற தலைவர்களை நோக்கி அரசியல் உள்நோக்கத்தோடு கேள்வியெழுப்புகிறார்கள்.
ஆனால், தற்போதைய ஆட்சி அதன் இரண்டாவது வருடத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும், ஆளுங்கட்சியிலிருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தின் எப்பிரச்சினைகளுக்கு இதுவரை என்ன தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளதை அவர்களால் மறுக்க முடியாது.
அதிகார பலம் கொண்ட ஆளுங்கட்சிப்பக்கத்தில் அமர்ந்திருந்தும் அமைச்சரவை அந்தஸ்தோ சமூகப்பிரச்சினைகளுக்கான தீர்வோ இல்லாத நிலையில், வெறும் அரசியல் சுயநலத்திற்காக எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுக்கும் மூத்த தலைவர்களை ஆளும்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் விமர்சிப்பது எவ்வகையிலும் நியாயமற்றதாகும்.
"ஒற்றுமையே எமது பலம்" என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின், தமக்கிடையேயுள்ள காழ்ப்புணர்ச்சிகளை மறந்து, ஒருவரையொருவர் பொதுவெளியில் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.
தலைமைத்துவப்போட்டிகளைத்தவிர்த்து, சமூகத்தின் பொதுவான நலனை முன்னிறுத்தி, தகுதியான ஆளுமையின் கீழ் ஒருங்கிணையக்கூடிய விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு முஸ்லிம் சமூகத்தின் அனைத்து அரசியல் தரப்புகளும் வர வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி பல கூட்டங்களினூடாகத் தொடர்ந்து விடுத்து வரும் ஒற்றுமைக்கான அழைப்பை ஏனைய சிறிய முஸ்லிம் கட்சிகள் சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
முடிவாக, முஸ்லிம் சமூகம் தனது உரிமைகளைப் பாதுகாத்து, கௌரவமானதொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஒற்றுமையைத்தவிர வேறு வழியில்லை.
வாக்குச்சிதறல்கள் மூலம் நமது அரசியல் பலத்தை நாமே அழித்துக்கொள்ளும் தற்கொலைச் சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். பாராளுமன்றில் வெறுமனே கதிரைகளை அலங்கரிப்பதைக்காட்டிலும், சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பலமான ஆளுமையாக, நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டு விளங்கும் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், பிரிந்து கிடக்கும் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டுச்செயற்பட வேண்டும்.
அதுவே, தற்போதைய சவாலான அரசியல் சூழலில், எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பையும் உரிமைகளையும் உறுதி செய்வதற்கான ஒரேயொரு மார்க்கமாகும்.
