எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் ஹைராத் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஏற்பாட்டில், மாணவர்களை மஸ்ஜிதுடன் நெருக்கமாக இணைத்து, அவர்களின் மார்க்க அறிவு, ஒழுக்கம் மற்றும் ஆளுமைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியான இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதைப்பந்தாட்டப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் "சுன்னத்தான துஆக்கள்" எனும் பயனுள்ள நூல் ஆகியன ஹைராத் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
தனது உரையில், இன்றைய மாணவர்கள் நாளைய சமூகத் தலைவர்களாகவும், சமூகத்திற்கு வழிகாட்டும் பொறுப்புமிக்க ஆளுமைகளாகவும் உருவாக வேண்டுமெனில், அறிவு, ஒழுக்கம், மார்க்கப் பற்றுதல், தலைமைத்துவத் திறன், நேர முகாமைத்துவம், பொறுப்புணர்வு, சமூக சேவை மனப்பான்மை மற்றும் நற்குணப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், இஸ்லாமிய கல்வியையும் உலகக் கல்வியையும் சமநிலையுடன் கற்று, சமூகத்திற்கு பயனுள்ள முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ மாணவர்களை ஊக்குவித்து வழிகாட்டினார்.
நிகழ்வின் நிறைவில் மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களையும் வழங்கி கௌரவித்தார்.
இத்தகைய செயற்பாடுகள், இளம் தலைமுறையை மஸ்ஜித்களுடன் தொடர்ச்சியாக இணைத்து, மார்க்க விழிப்புணர்வும் நல்லொழுக்கமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கான சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளன.
குறிப்பாக, ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புத்தளம் நகரக்கிளைக்குட்பட்ட சுமார் 3,900 மாணவர்களையும் வருடம் முழுவதும் மஸ்ஜித்களுடன் இணைத்து வைத்திருக்க, இவ்வாறான கல்வி, விளையாட்டு மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.





