JobVibe.lk - Sri Lanka Job Portal

சிறைச்சாலை இடநெருக்கடி அரச பகுப்பாய்வுத்திணைக்கள தாமதங்கள் - தீர்வுகளை முன்வைக்கும் முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

இலங்கை சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் பாரிய இடநெருக்கடி, மனிதாபிமான சிக்கல்கள் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் தாமதங்கள் ஆகியவற்றுக்கான தீர்வுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ளார்.

​'சூரியனின் விழுதுகள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். 

அவர் முன்வைத்த முக்கிய கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:

சிறைச்சாலை இடநெருக்கடியும் பிணைச் சட்டங்களும்

இலங்கையில் 10,000 பேர் மட்டுமே இருக்க வேண்டிய சிறைச்சாலைகளில் தற்போது 40,000-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குற்றவாளிகள் அல்லர் எனவும், பிணை வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

​இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பிணை வழங்கும் சட்டங்களில் போதிய நெகிழ்வுத்தன்மை (Flexibility) கொண்டுவரப்பட வேண்டும். மேலும், மிகச் சிறிய அளவிலான தண்டப்பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​அரச பகுப்பாய்வுத் திணைக்கள தாமதங்களும் பிணை நடைமுறையும்

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரச பகுப்பாய்வு அறிக்கை வெளிவர நீண்ட காலம் எடுப்பதால், சந்தேகநபர்கள் பல மாதங்களாகச் சிறையில் வாடும் நிலைமை காணப்படுகிறது. 

தான் நீதியமைச்சராக இருந்த காலத்தில், ஒரு சந்தேகநபர் சிறையிலடைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பகுப்பாய்வு அறிக்கை கிடைக்காவிட்டால் அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார். அந்தத் தீர்மானம் முறையாகச் செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

​அதேவேளை, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் நிலவும் நீண்டகாலப் பணியாளர் வெற்றிடங்களே இந்தத் தாமதங்களுக்கு முக்கிய காரணமாகும். எனினும், அந்த வெற்றிடங்களை நிரப்பவும், புதிய ஆட்களை ஆட்சேர்ப்புச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தற்போதைய நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இதன் மூலம் பணிகளை விரைவுபடுத்த முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

​நீதித்துறை விசாரணைகளில் நவீன தொழில்நுட்பம்

கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அதீத செலவுகளைத் தவிர்ப்பதற்காகப் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தலாம். சிறை வளாகத்திற்குள்ளேயே நீதிவான்கள் முன்னிலையில் பிணை வழங்கல் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வசதிகளை ஏற்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒன்லைன் (Online) ஊடாகச் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறையையும் நடைமுறைப்படுத்தலாம்.

​போதைப்பொருள் பாவனையாளர்களுக்குப் புனர்வாழ்வு

போதைப்பொருள் விற்பனையாளர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், போதைப்பொருள் பாவனையாளர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் நோயாளிகளாகக் கருதி, அவர்களைச் சிறைகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாகப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சுகாதாரம் மற்றும் மத உரிமைகள்

சிறைச்சாலைகளில் நிலவும் சுற்றுச்சூழல் சுத்தமின்மையால் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நோய்ப் பரவலைத் தடுக்க சுகாதார வசதிகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அனைத்து மதங்களையும் சேர்ந்த கைதிகளும் தத்தமது மதச் சட்டங்களின்படி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமைகளும் அதற்கான இடவசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


(தொகுப்பு :நிசப்தம்)



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال