JobVibe.lk - Sri Lanka Job Portal

பூநொச்சிமுனை இக்ராஹ் வித்தியாலய சாதனையாளர்களுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா!

மட்/மம/ பூநொச்சிமுனை இக்ராஹ் வித்தியாலயத்தின் 67 ஆண்டுகால கல்விச் சேவையை சிறப்பிக்கும் வகையிலும், 2025/2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பாராட்டு விழா இன்று (13) பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.பீ.ஏ. ரஸுல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக இப்ராஹிம் பவுண்டேஷன் தவிசாளர் அல்ஹாஜ் அமீர் ஹம்சா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், வேறு பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த இப் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் நினைவுச் சின்னங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டின.

பாடசாலையின் வளர்ச்சிக்கும் கல்விச் சேவைக்கும் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டி, அதிபர் ஏ.பீ.ஏ. ரஸுல் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேவேளை, சமூகத்திற்காக ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.

மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டுவதுடன், எதிர்காலத்தில் அவர்கள் உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கான ஊக்கத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.

1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்ராஹ் வித்தியாலயம், தனது 67 ஆண்டுகால கல்விப் பயணத்தில் பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்து வருகின்றது. இவ்விழாவில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளருமான இ.எம். றுஸ்வின், முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். சித்தீக், ஆங்கில பாட ஆலோசகர் (ISA) எம்.எம்.வை. நஜிமுத்தீன், முன்னாள் உதவி அதிபர் மன்சூர் (பலாஹி), அல்ஹாஜ் சாஜஹான் (பலாஹி), கல்வித்துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற மற்றும் தற்போதைய அதிபர்கள், உலமாக்கள், கல்விமான்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்புரி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


-- ஊடகப்பிரிவு










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال